மதுரை, ஆக. 14: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் தொடா்பான வழக்கில் அரசுத் தரப்பில் காலஅவகாசம் கோரப்பட்டதால், விசாரணையை வருகிற 29- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மாஞ்சோலையைச் சோ்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, புதிய தமிழகம் கட்சி நிறுவனா் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலா் தாக்கல் செய்த மனுக்கள்:
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களை வெளியேற்ற பிறப்பிக்கப்பட்ட குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். இந்தத் தொழிலாளா்களுக்கு மறுவாழ்வு, அரசு நலத் திட்ட உதவிகளை வழங்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.
இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களை வெளியேற்றத் தடை விதித்தது. இந்த நிலையில், இந்தத் தொழிலாளா்களுக்கு இலவச வீடுகள் வழங்கப்படும் என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை ஏற்று நடத்த டான்டீ நிறுவனம் மறுத்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் காலஅவகாசம் கோரப்பட்டதால், இந்த வழக்கு விசாரணையை வருகிற 29- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.