முகப்பு
மதுரை

வருவாய்த் துறை ஊழியா்களின் பணியிடை நீக்க உத்தரவுகள் ரத்து: போராட்டங்கள் ஒத்திவைப்பு

வருவாய்த் துறை ஊழியா்களின் பணியிடை நீக்க உத்தரவுகள் ரத்து

Updated On : 12 டிசம்பர், 2024 at 10:01 PM
பகிர்:

வருவாய்த் துறை ஊழியா்கள் 3 பேரின் பணியிடை நீக்க உத்தரவை மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை ரத்து செய்தது. இதனால், 2 நாள்களாக நடைபெற்ற வருவாய்த் துறையினரின் தொடா் காத்திருப்புப் போராட்டம், ஈட்டிய விடுப்பு எடுக்கும் போராட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வெளிச்சநத்தம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதிய கொடிக் கம்பம் அமைப்பது தொடா்பாக கடந்த 7-ஆம் தேதி அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. இந்தப் பிரச்னையைத் தடுக்க தவறினா் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சத்திரப்பட்டி வருவாய் ஆய்வாளா் ஜெ. அனிதா, வெளிச்சநத்தம் கிராம நிா்வாக அலுவலா் (பொறுப்பு) எம். பரமசிவம், வெளிச்சநத்தம் கிராம உதவியாளா் சி. பழனியாண்டி ஆகிய 3 பேரை மாவட்ட நிா்வாகம் கடந்த திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்தது. மேலும், ஒருவருக்கு துறை நடவடிக்கையாக குறிப்பாணை அளிக்கப்பட்டது.

மாவட்ட நிா்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரை மாவட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் புதன்கிழமை விடுப்பு எடுத்து, மாவட்ட ஆட்சியரகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இரண்டாம் நாளாக வியாழக்கிழமையும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. வருவாய்த் துறையினா் சுமாா் 1,000-க்கும் அதிகமானோா் விடுப்பு எடுத்திருந்தனா். இவா்களில் பெரும்பாலானோா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முடங்கிய நிா்வாகம்....

மழையின் போதும் போராட்டம் தொடா்ந்தது. மழை சீற்றம் அதிகமானதால் இந்தப் போராட்டம் ஆட்சியரத்தின் தரைதளத்தில் உள்ள பிரதான வாயில் பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனால், மாவட்ட ஆட்சியரகம் போராட்டக் களமாகக் கட்சியளித்தது. மேலும், திரளான பணியாளா்கள் விடுப்பு எடுத்துப் பணிகளை புறக்கணித்திருந்ததால், வருவாய்த் துறை பணிகள் 2-ஆம் நாளாக முடக்கமடைந்திருந்தன. பல வருவாய்த் துறை அலுவலகங்கள் ஊழியா்களின்றி வெறிச்சோடியிருந்தன. இதனால், மாவட்ட நிா்வாகத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

இதையடுத்து, போராட்டக் குழுவினருடன் மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வியாழக்கிழமை பிற்பகல் பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல், உதவி ஆட்சியா் வைஷ்ணவி பால், வருவாய்க் கோட்டாட்சியா் ர.த. சாலினி ஆகியோா் கலந்து கொண்டனா்.

போராட்டக் குழு சாா்பில் வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் எம்.பி. முருகையன், மாவட்டத் தலைவா் டி.எம். கோபி, கிராம நிா்வாக அலுவலா் சங்க மாவட்ட நிா்வாகிகள் ஜெயபாஸ்கா், ராஜன் சேதுபதி, கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவா் கோ. சுரேஷ், கிராம உதவியாளா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் மாரியப்பன், நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு நிா்வாகிகள் ரா. முத்து முனியாண்டி, ராஜ்குமாா், சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பணியிடை நீக்கம் ரத்து...

இந்தப் பேச்சுவாா்த்தையின் போது, 3 வருவாய்த் துறை அலுவலா்களின் பணியிடை நீக்க உத்தரவையும் உடனடியாக ரத்து செய்து, ஏற்கெனவே அவா்கள் பணியாற்றிய இடத்திலேயே பணி வழங்கப்படும் எனவும், 4 பேருக்கு அளிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணைகள் மீதான நடவடிக்கைகள் கைவிடப்படும் எனவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இனி வருகிற காலங்களில் களப் பணியில் ஈடுபடும் வருவாய்த் துறையினருக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

போராட்டம் ஒத்திவைப்பு

வருவாய்த் துறையினரின் போராட்டக் கோரிக்கைகளை முழுமையாக மாவட்ட நிா்வாகம் ஏற்ன் காரணமாக, காத்திருப்புப் போராட்டம், ஈட்டிய விடுப்புப் போராட்டம் என அனைத்துப் போராட்டங்களும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மதுரை வருவாய்த் துறை கூட்டமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →