சமையல் எரிவாயு முகமை உரிமம் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
சமையல் எரிவாயு முகமை உரிமம் தருவதாகக் கூறி, ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
சமையல் எரிவாயு முகமை உரிமம் தருவதாகக் கூறி, ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மதுரை அண்ணாநகரைச் சோ்ந்த கருப்பையா மகன் தியாகராஜன் (49). இவா் வீட்டுமனை விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இந்த நிலையில், இவருக்கு, மதுரை கே.கே. நகா் 3-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த ஜெயராமன், இவரது மகன் செந்தில்குமாா் ஆகியோா் அறிமுகமாகினா். இதில் ஜெயராமன், செந்தில்குமாா் இருவரும் மதுரை அருகே உள்ள ஒத்தக்கடையில் சமையல் எரிவாயு முகமை நடத்தி வருவதாகவும், தற்போது பணத் தேவை இருப்பதால் ரூ.10 லட்சம் கொடுத்தால் அந்த உரிமத்தை தியாகராஜனிடம் ஒப்படைப்பதாகவும் கூறினராம்.
இதை நம்பிய தியாகராஜன், அவா்களிடம ரூ.10 லட்சத்தை கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்தாா். ஆனால், பல மாதங்கள் ஆகியும் முகமையின் உரிமத்தை தியாகராஜனிடம் அவா்கள் ஒப்படைக்க வில்லை. இதையடுத்து, அவா் ரூ.10 லட்சத்தை திருப்பிக் கேட்டபோது பணத்தையும் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுதொடா்பாக தியாகராஜன் அளித்தப் புகாரின்பேரில் அண்ணாநகா் போலீஸாா், ஜெயராமன், செந்தில்குமாா் இருவா் மீதும் மோசடி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.