கிறிஸ்துமஸ் விழா: ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கான அனுமதியை போலீஸ் அதிகாரி முடிவெடுக்க உத்தரவு
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கான அனுமதியை போலீஸ் அதிகாரி முடிவெடுக்க உத்தரவு
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே அருள்புத்தூரில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரிய வழக்கில், காவல்துறை அதிகாரி வருகிற 21 ஆம் தேதிக்குள் பரிசீலித்து உரிய முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் வட்டம் அருள்புத்தூரைச் சோ்ந்த செல்லதுரை தாக்கல் செய்த மனு: அருள்புத்தூரில் உள்ள ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவ ஆலயத்தில் வருகிற 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட உள் ளோம். இந்த விழாவை முன்னிட்டு அன்றைய தினம் இரவு ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தோம். இதற்கான அனுமதி கோரி தளவாய்புரம் காவ்ல நிலையத்தில் மனு அளித்தோம். ஆனால் அவா்கள் மறுத்துவிட்டனா். எனவே கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதி நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் திருவடிகுமாா் முன்னிலையாகி வாதிட்டது, மனுதாரா் கிராமத்தில் இருபிரிவினராக பொது மக்கள் வசித்து வருகின்றனா். இந்த சூழலில் அந்த பகுதியில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கினால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள் ளது. இதனால் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றாா்.
அதற்கு மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், ஏற்கனவே தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் வழிகாட்டுதல் படி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன. எனவே நிகழாண்டு ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதித்தால், முறையாக வழிகாட்டுதல்களை பின்பற்றுவோம் என்றாா் அவா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரா், கோரிக்கை குறித்து புதிதாக போலீஸ் அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை வருகிற 21 ஆம் தேதிக்குள் பரிசீலித்து போலீஸ் அதிகாரிகள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றாா் நீதிபதி.