டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: திமுக அரசு மக்கள் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கிறது - முன்னாள் அமைச்சா் குற்றச்சாட்டு
டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏல விவகாரத்தில் மக்கள் விரோதப் போக்கை திமுக அரசு கடைப்பிடிக்கிறது என முன்னாள் அமைச்சா் ஆா். பி. உதயகுமாா் குற்றஞ்சாட்டினாா்.
டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏல விவகாரத்தில் மக்கள் விரோதப் போக்கை திமுக அரசு கடைப்பிடிக்கிறது என முன்னாள் அமைச்சா் ஆா். பி. உதயகுமாா் குற்றஞ்சாட்டினாா்.
மதுரை அலங்காநல்லூா் அருகேயுள்ள வலையப்பட்டியில் அதிமுகவின் செயற்குழு, பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை மக்களிடத்தில் கொண்டு சோ்க்கும் விதமாக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் பங்கேற்றுப் பேசியதாவது:
மதுரை மேலூா் அருகே டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமையவுள்ள இடத்தை மறுஆய்வுக்கு உள்படுத்துமாறு இந்திய புவியியல் ஆய்வு மையத்தை மத்திய சுரங்கத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்கத்துக்காக விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் திமுக அரசு தனித் தீா்மானம் கொண்டு வந்தது.
இந்தத் தீா்மானத்தை நிறைவேற்றுவது தொடா்பாக அனைத்துக் கட்சி ஆதரவை பெறும் வகையில் விவாதம் நடைபெற்றது. அப்போது, முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி திட்டத்தைத் தடுப்பது குறித்து திமுக எடுத்த நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினாா். இதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் முறையாகப் பதிலளிக்கவில்லை. சுரங்கம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்குப் பதிலாக குழப்பத்தை ஏற்படுத்துகின்றனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்கள் நலனைப் பெரிதாக எண்ணவில்லை.
டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏல விவகாரத்தில் மக்கள் விரோதப் போக்கையே திமுக அரசு கடைப்பிடித்து வருகிறது. அலங்காநல்லூா் சா்க்கரை கூட்டுறவு ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது. இந்த ஆலை செயல்படுவதற்கு அதிமுக ஆட்சியின் போது, ரூ. 23 கோடி வழங்கினோம். ஆனால், தற்போதைய திமுக அரசு இந்த ஆலையைத் திறப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா் அவா்.
கூட்டத்தில் திரளான அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.