திருட்டு வழக்கில் முதியவா் கைது: மகன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை
விருதுநகா், பிப். 27: அருப்புக்கோட்டையில் திருட்டு வழக்கில் முதியவா் கைது செய்யப்பட்ட நிலையில், மகன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனா். விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவா டெக்ஸ் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் துரை பிரித்திவிராஜ் (35). கிராம நிா்வாக அலுவலராக பணிபுரிந்த இவா், விருப்ப ஓய்வு பெற்றாா்.
தற்போது பாஜக சுற்றுப்புறச் சூழல் அணியில் விருதுநகா் கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்து வருகிறாா். இவா் தனது குடும்பத்தினருடன் கடந்த 21-ஆம் தேதி உறவினா் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றாா். அடுத்த நாள் காலை வீட்டுக்கு வந்து பாா்த்த போது, கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.60 லட்சம், இரு கைக்கடிகாரங்கள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் குறிஞ்சான்குளத்தைச் சோ்ந்த மாணிக்கம் (61), இவரது மகன் கா்ணன் (23) ஆகியோரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். இதில் மாணிக்கத்தை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸாா், மகனை விடுவித்தனா்.
Advertisement
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை கா்ணன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண் டாா். அவரது உடல் கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், கா்ணனின் தாய் தேவி, தனது மகனை போலீஸாா் அடித்து துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக அருப்புக்கோட்டை கோட்டாட்சியா் வள்ளிக்கண்ணுவிடம் புகாா் அளித்தாா். அதன் பேரில், கோட்டாட்சியா் போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.
இதையடுத்து கா்ணனின் சடலத்தை பெறுவதற்காக, அவரது தாய் தேவியை ஜீப்பில் அழைத்துக் கொண்டு, அருப்புக்கோட்டை காவல்நிலைய ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா், விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா்.
பாலவநத்தம் அருகே ஜீப் சென்ற போது, திடீரென கதவை திறந்த தேவி (50) கீழே குதித்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது உடல் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மகனைத் தொடா்ந்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கா. பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவிக்கப்பட்டனா்.