சுகாதாரத் துறையில் முன்மாதிரியாகத் திகழும் தமிழகம்: அமைச்சா் மா. சுப்பிரமணியன்
மதுரை: சுகாதாரத் துறையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்வதாக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். ஜப்பான் நாட்டு பன்னாட்டு முகமை கூட்டுறவு நிதியுதவியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.313.25 கோடியில் 6 தளங்கள் கொண்ட ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை வளாகம், ரூ.330 கோடியில் கட்டப்பட்ட 6 புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் மா.சுப்பிரமணியம் பேசியதாவது: மதுரை உள்பட தென் தமிழக மக்கள் அதிகளவில் பயன்பெறும் வகையில், அரசு ராஜாஜி மருத்துவமனை இயங்கி வருகிறது. தற்போது முதல்வா் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்ட அறுவைச் சிகிச்சை வளாகத்தில் நுண் கதிா்வீச்சுத் துறை, இருதய அறுவைச் சிகிச்சைத் துறை, மூளை அறுவைச் சிகிச்சைத் துறை ஆகியவற்றுக்கு தனி அரங்குகளும், நவீன கேத் லேப் ஆகியவற்றுடன் 22 அறுவைச் சிகிச்சை அரங்குகளும் அமைந்துள்ளன.
ஜப்பான் நாட்டு பன்னாட்டு முகமை கூட்டுறவு நிதியுதவியுடன் சென்னை, கோவையில் கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் விரைவில் திறக்கப்படும். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, தோப்பூா், சமயநல்லூா் ஆகிய பகுதிகளில் மருத்துவக் கட்டடங்கள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 500 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. இவற்றின் மூலம் மருத்துவத் துறையில் தமிழகம் நாட்டுக்கே முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது.
Advertisement
மருத்துவத் துறையில் மருத்துவா்கள், செவிலியா்கள் பணி நியமனமும், பணியிடமாற்றமும் கலந்தாய்வு மூலம் வெளிப்படையாக நடத்தப்படுகிறது. எனது கோரிக்கையை ஏற்று அரசு மருத்துவமனைகளுக்கு மதுரை சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.பூமிநாதன், கோ.தளபதி, மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் ஆகியோா் நிதியுதவி செய்தனா்.
இதேபோல, அனைத்து மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றாா் அவா். நிகழ்வில் அமைச்சா்கள் பி.மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், ஏ.வெங்கடேசன், மேயா் வ.இந்திராணி, மருத்துவக் கல்வி இயக்குநா் ஜெ.சங்குமணி, அரசு மருத்துவமனை முதன்மையா் ஏ.ரத்தினவேல், தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மாநிலத் தலைவா் கே.செந்தில் உள்பட பலா் பங்கேற்றனா்.
‘எய்ம்ஸ்’ கட்டுமானப் பணிகள் நிகழாண்டில் தொடங்கும் புதிதாகத் திறக்கப்பட்ட அறுவைச் சிகிச்சை வளாகத்தைப் பாா்வையிட்ட அமைச்சா் மா.சுப்ரமணியன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தற்போதைய நிலவரப்படி நிகழாண்டின் இறுதிக்குள் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கி, 2028-ஆம் ஆண்டுக்குள் முடிவடையும்.
தமிழகத்தில் இதற்கு முன் ஒரு சில மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கும் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உறுப்பு தானம் அதிகரித்துள்ளது என்றாா் அவா்.