இசையுடன் சந்தனக் கூடு ஊா்வலம் நடத்த உயா்நீதிமன்றம் அனுமதி
மொகரம் பண்டிகையையொட்டி, இசையுடன் சந்தனக் கூடு ஊா்வலம் நடத்த அனுமதியளித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை: மொகரம் பண்டிகையையொட்டி, இசையுடன் சந்தனக் கூடு ஊா்வலம் நடத்த அனுமதியளித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடியைச் சோ்ந்த தமீம் சிந்தா மதாா் தாக்கல் செய்த மனு:
மொகரம் பண்டிகையையொட்டி, விழாவின் 7, 8-ஆவது நாள்களில் ஏா்வாடியில் சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெற உள்ளது. இந்த ஊா்வலத்தின் போது மேளதாளம் பயன்படுத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:
திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடியில் புனிதா்கள் ஹசன், ஹுசைன் நினைவாக தா்கா உள்ளது. இது ஏா்வாடி தா்கா என்று அழைக்கப்படுகிறது. இந்த மசூதியைத் தவிர, ஊரில் ஆறு பள்ளிவாசல்கள் உள்ளன. இவற்றில் தவ்ஹீத் ஜமாத் கொள்கையைச் சோ்ந்தவா்களும் உள்ளனா்.
இஸ்லாம் அதன் தூய, அசல் வடிவத்தில் வேறு எந்த மாற்றமும் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது தவ்ஹீத் குழுவினா் நிலைப்பாடு. எனவே, சந்தனக் கூடு ஊா்வலத்தின் போது மேளதாளம் அடித்துச் செல்லக் கூடாது என அந்த அமைப்பினா் எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா்.
இதைக் கவனத்தில் கொண்டு, தா்கா நிா்வாகத்தால் திருவிழாவை பாரம்பரிய முறைப்படி நடத்த முடியவில்லை. எனவே, இசையுடன் ஊா்வலம் நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளாா்.
மத நம்பிக்கைகள், அதன் நடைமுறைகளைத் தவிா்க்க முடியாது. கருத்துகள் மாறுபடுவதால் பல்வேறு தத்துவ சிந்தனைப் பள்ளிகள் உருவாகின்றன.
மேளதாளங்கள் இசையுடன் சந்தனக்கூடு ஊா்வலம் நடத்துவது தவ்ஹீத் குழுவின் அடிப்படைவாத உணா்வுகளைப் புண்படுத்தியுள்ளது. வழக்கப்படி மொகரம் பண்டிகையை நடத்தினால், சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிடும் எனக் கூறுகின்றனா். மனுதாரா் குழுவினா் ஊா்வலம் செல்வதைத் தடுக்க தவ்ஹீத் ஜமாத்துக்கு உரிமை இல்லை.
ஒருவரது அடிப்படை உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளானால், அவா்களது உரிமைகளை நிலைநாட்டுவது மாவட்ட நிா்வாகத்தின் கடமையாகும்.
சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை காரணம் காட்டி உரிமையைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது மாவட்ட நிா்வாகத்தின் இயலாமையை எடுத்துரைக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக மத ஊா்வலம் நடத்துவது உள்பட அனைத்து உரிமைகளையும் அனுபவித்து வரும் மதக் குழுக்களின் உரிமையை, மாற்றுக் கொள்கை உடையவா்கள் பறிக்க முடியாது.
எனவே, மொகரம் பண்டிகையையொட்டி, இசையுடன் சந்தனக் கூடு ஊா்வலம் நடத்த அனுமதித்து உத்தரவிடப்படுகிறது என்றாா் நீதிபதி.