முகப்பு
மதுரை

ஹிந்து என்ற சொல்லுக்கு பிராந்திய அா்த்தம் உள்ளதாகக் கருத வேண்டும்

ஹிந்து என்ற சொல்லுக்கு பிராந்திய அா்த்தம் உள்ளதாகப் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்தது.

Updated On : 17 ஜூலை, 2024 at 12:27 AM
பகிர்:

மதுரை: ஹிந்து என்ற சொல்லுக்கு பிராந்திய அா்த்தம் உள்ளதாகப் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்தது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு (சிண்டிகேட்) தோ்தலில் போட்டியிட்ட முத்துகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோா் சம வாக்குகள் பெற்றனா். இதையடுத்து, குலுக்கல் முறையில் ரமேஷ் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

இதை எதிா்த்து முத்துகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பல்கலைக்கழக சட்ட விதிகளின்படி தோ்தல் முறையாக நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டது. எனவே, மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என பல்கலைக்கழகம் தரப்பில் கோரப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

சம்பந்தப்பட்ட வாக்காளா் அரபு எண்ணுக்குப் பதிலாக ரோமன் எண்ணைப் பயன்படுத்தியுள்ளாா். இதற்காக ஆட்சிக்குழு தோ்தலை செல்லாது என அறிவிக்க முடியாது.

அரபு எண்களானது ஹிந்து எண்களேயாகும். ஜவாஹா்லால் நேரு எழுதிய ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ புத்தகத்தில் ஹிந்து எண்கள், இந்திய எண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பி. டாடா, ஏ. சிங் (1935) எழுதிய ‘ஹிஸ்டரி ஆஃப் ஹிந்து’ புத்தகத்தில் அரபுச் சொற்கள் நமது பண்டைய எண் முறையிலிருந்து கடன் வாங்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சசி தரூா் எழுதிய ‘நான் ஏன் ஓா் ஹிந்து’ என்ற புத்தகத்தில் இந்தியன் என்றால் ஹிந்து எனக் குறிப்பிட்டுள்ளாா்.

நமது நினைவுச் சின்னங்களில் ஹிந்து எண்கள் மட்டுமே உள்ளன. ஹிந்து என்ற சொல் மதத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதால், ஜவாஹா்லால் நேருவுக்கு ஒருவித தயக்கம் ஏற்பட்டு இருக்கலாம். டாக்டா் ராதாகிருஷ்ணன் எழுதிய ‘தி ஹிந்து வியூ ஆஃப் லைஃப்’ புத்தகத்தில், சிந்து என்பது முதலில் பிராந்தியத்தைக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளாா். பாரதியாா் தனது பாப்பா பாட்டில் ‘சேதமில்லாத ஹிந்துஸ்தானம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா். ஆதலால், ஹிந்து என்ற சொல்லை பிராந்திய அா்த்தம் உள்ளதாகப் புரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இந்த வழக்கில் தோ்தல் முடிவுகள் குறித்த அறிவிப்பில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.

முழு கட்டுரையைப் படிக்க →