முகப்பு
தமிழ்மணி

பிள்ளைத் தமிழ்... இலக்கிய இன்பம்!

பிள்ளைத் தமிழ் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களில் ஒன்று.

Updated On : 8 மார்ச், 2026 at 11:51 AM
பகிர்:

திருப்பூர் கிருஷ்ணன்

'பிள்ளைத் தமிழ் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களில் ஒன்று. இடைக்காலத்தில்தான் இந்தப் பிரபந்தம் தோன்றியது எனினும் இதற்கான அடிப்படைக் கூறுகள் சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலுமே தோன்றிவிட்டன எனலாம்.

'இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்

குறுகுறு நடந்து சிறுகை நீட்டி' என்று

பாண்டியன் அறிவுடை நம்பி எழுதிய புறநானூற்றுச் சங்க வரிகளும், திருக்குறளின் மக்கட்பேறு அதிகாரத்தில் 'குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்' என்றெல்லாம் வரும் குறட்பாக்களும் பிள்ளைத் தமிழுக்குப் பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றன.

பிள்ளைத் தமிழின் கூறுகளை 'ஓடி வருகையிலே எந்தன் உள்ளம் குளிருதடீ, ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவுதடீ!' எனத் தொடரும் பாரதியார் வரிகளிலும் காணலாம்.

குழந்தையால் கிடைக்கும் இன்பம் புனிதமும் தூய்மையும் நிறைந்த ஒரு தனி இன்பம். குழந்தையைக் கொஞ்சுவதாலும் அதன் மழலைச் சொல்லைக் கேட்பதாலும் கள்ளம் கபடமற்ற அதன் எழிலை ரசிப்பதாலும் விளையும் இன்பம் அது.

குழந்தையால் கிடைக்கும் மகிழ்ச்சியை சுதானந்தம் என சம்ஸ்க்ருதம் குறிப்பிடுவதாய்ச் சொல்லி விளக்குவார் வாரியார் சுவாமிகள்.

பிள்ளைத் தமிழ் என்ற இலக்கிய வகை மூலம் மனிதர்களின் குழந்தைப் பருவத்தை வகைப்படுத்திக் கொண்டாடுகிறது நம் தமிழ். குழந்தை பிறந்த மூன்று மாதம் முதல் இருபத்தோரு மாதம் வரையிலான வாழ்க்கைக் காலம் பத்துப் பருவங்களாகப் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் பாடுவது வழக்கம்.

பிள்ளைத் தமிழ் ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண்பால் பிள்ளைத் தமிழ் என இரண்டு வகைப்படும். ஆண்பால் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களை உடையது. பெண்பால் பிள்ளைத் தமிழில் இறுதியில் உள்ள மூன்று பருவங்களுக்கு ஈடாக கழங்கு, அம்மானை, ஊசல் என்னும் பருவங்கள் இடம்பெறும்.

பிள்ளைத் தமிழ் என்ற பிரபந்த வகை தொடங்கிய காலத்தில், தொடக்கத்தில் எழுந்தது கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தரால் இரண்டாம் குலோத்துங்க சோழன் மீது எழுதப்பட்ட குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்.

பிள்ளைத்தமிழ் நூல்களில் குமரகுருபரர்

எழுதிய மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்,

பகழிக் கூத்தர் எழுதிய திருச்செந்தூர்ப்

பிள்ளைத் தமிழ் போன்றவை புகழ்பெற்றவை.

பின்னாளில் அரசியல் தலைவர்கள் மீதும் பிள்ளைத் தமிழ் நூல்கள் இயற்றப்பட்டன. இலக்கியப் பிரமுகர்கள் மீது கூடப் பிள்ளைத் தமிழ் நூல்கள் எழுந்தன.

அண்மைக்காலத்தில் எழுதப்பட்ட அத்தகைய இரு பிள்ளைத் தமிழ் நூல்கள் கவனத்திற்குரியவை.

தமிழின் தற்கால இலக்கிய உலகில் தம்

எழுத்துகளால் தடம் பதித்தவர் தீபம்

நா. பார்த்தசாரதி. அதுபோல், தமிழின்

ஆன்மிகச் சொற்பொழிவுத் துறையில் முத்திரை பதித்தவர் புலவர் கீரன். இவ்விருவரும் காலமான சூழலில் இவ்விருவர் குறித்து பிள்ளைத் தமிழ் நூல்கள் புனையப்பட்டன.

நா. பார்த்தசாரதி எழுத்துகளின் தீவிர ரசிகை கமலம் சங்கர்; நா.பா.வை தன் சொந்த சகோதரர்போல் கருதியவர். நா.பா.வின் மனைவி சுந்தரவல்லி உள்ளிட்ட அவரது குடும்பத்தாரிடமும் நட்புறவு கொண்டு பழகியவர். நா.பா. குடும்பத்தார் அனைவரின் பேரன்பைப் பெற்றவர்.

'நா.பார்த்தசாரதியின் சமூக நாவல்களில் பாத்திரப் படைப்பு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அவர் முனைவர் பட்டம் பெற்றார்.

நா.பா. திடீரென்று மாரடைப்பால் தம்

ஐம்பத்து ஐந்து வயதிலேயே காலமானதும்

அந்தத் துயரிலிருந்து விடுபட முடியாமல் தவித்தது கமலம் சங்கரின் அன்பு மனம். தமிழ்ப் பேராசிரியரான அவர் அந்தத் துயரத்திலிருந்து விடுபடத் தாமே ஓர் உத்தியைக் கண்டறிந்தார். நா.பா. காலமான சிறிது காலத்திலேயே, 'நா.பா. பிள்ளைத் தமிழ்' என்ற மரபு வழிப்பட்ட செய்யுள் நூலை எழுதலானார். அந்த நூலை எழுதி முடித்ததும் அவருக்கு உண்மையிலேயே ஓர் ஆறுதல் கிட்டியது.

'மணிவண்ணா! நீ ஆடுக செங்கீரை! கோபுர தீபமே தாலோ தாலேலோ! தீபமே! சப்பாணி கொட்டியருளே! கண்ணே கண்மணி என்மணி வண்ணா! சிற்றில் சிதையேலே! குறிஞ்சி மலர்படை குறிஞ்சி மலரே! உருட்டுக சிறுதேரே!' என்றெல்லாம் அதில் வரும் அழகிய வரிகள் நா.பா.வோடு தொடர்புடையனவாய் நெஞ்சை மகிழ்விக்கின்றன.

சொற்பொழிவுத் துறை நட்சத்திரமான கீரன், சற்றே கால் ஊனமான ஒரு மாற்றுத் திறனாளி. தமிழ்ப் புலமை மிக்கவர். புலவர் கீரன் என்றே அறியப்பட்டவர்.

செல்லப்பாப்பா கீரன் தமிழார்வம் நிறைந்தவர். அவரும் பழந்தமிழில் பாண்டித்தியம் உடையவர்தான். தமிழ் ஆசிரியர். அவர்கள் இருவரிடையே தமிழ் காரணமாக அன்பு மலர்ந்தது. அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். அது காதல் திருமணம்.

இருவருமே பேச்சாற்றல் நிறைந்தவர்கள் என்பதால், ஒரே மேடையில் இருவரும் சொற்பொழிவு நிகழ்த்துவது உண்டு.

வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் நடுவராக இருந்த சில பட்டிமன்றங்களில் கீரனும், செல்லப்பாப்பா கீரனும் எதிரெதிர்க் கட்சிகளில் வாதாடியதும் உண்டு.

புலவர் கீரன் காலமானபோது, செல்லப்பாப்பாவின் காதல் மனம் அந்தத் துயரிலிருந்து விடுபட வழிதேடித் தவித்தது. தன் கணவரைப் பாட்டுடைத் தலைவனாக்கி அவர்மீது 'கீரன் பிள்ளைத் தமிழ்' என்ற செய்யுள் நூல் எழுதினார் அவர். அதன்பின் அவர் துயரம் மெல்ல மெல்லத் தணிந்தது.

'கற்றவை அனைத்தும் கசடறச் சொல்வாய், கற்கக் கற்க உளம்களி கொள்வாய், பையெடுத்துத் தோளினிலே தொங்கவிட்டுப் பாங்காய் நடந்து போகையிலே, மயிலாடுதுறை தந்த மன்னவா தாலேலோ, மெல்ல உறங்குதற்கு மேல்போர்த்தும் பொன்னாடை...தாலோ தாலேலோ! பேச்சாலே கிறுகிறுக்கச் செய்தாய் நீ!' என்றெல்லாம்

அதில் இடம்பெறும் வரிகள் சொற்பொழி

வாளர் கீரனின் பெருமைகளைப் பேசுகின்றன.

அறிவை வளர்க்கும் தமிழ், இலக்கிய

இன்பத்தை வாரி வாரி வழங்கும் தமிழ்,

ஆறுதலையும் தரவல்லது என்பதற்கு இவ்விரு பிள்ளைத் தமிழ் நூல்களும் சாட்சி.

பழந்தமிழ் இலக்கிய வகைகள் ஒருபோதும் அழிவதில்லை. அவை காலந்தோறும் தாண்டி வந்து, தேவைப்படுபவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் வகையில் உதவுகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →