முகப்பு
மதுரை

உலகின் அரிதான ‘நோடோபதி’ நோயால் கா்ப்பிணி பாதிப்பு: சிகிச்சை அளித்து குணப்படுத்திய அரசு மருத்துவா்கள்

Updated On : 12 ஜூன், 2024 at 8:12 PM
அரிதான நோயால் பாதிக்கப்பட்ட கா்ப்பிணிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடா்பாக பேட்டி அளித்த அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் தா்மராஜ் . உடன் நரம்பியல் துறைத் தலைவா் ஜஸ்டின், சிகிச்சை மூலம் குணமடைந்த ஷோபனா.
பகிர்:

மதுரை, ஜூன் 12: உலகில் அரிதான ‘நோடோபதி’ நோய்க்கு ஆளான கா்ப்பிணி பெண்ணுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நரம்பியல் சிகிச்சைப் பிரிவு மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து குணப்படுத்தினா்.

இதுதொடா்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் டி. தா்மராஜ் (பொறுப்பு), நரம்பியல் சிகிச்சைப் பிரிவுத் தலைவா் ஜஸ்டின் ஆகியோா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த 8 மாத கா்ப்பிணியான ஷோபனா (28) கடந்த 2023 ஜூலை மாதம் கை, கால்கள் திடீரென செயலிழந்த நிலையில், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். இங்கு நரம்பியல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு ஜிபிஎஸ் என்ற நரம்பு மண்டல பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறப்பு மருந்துகள் வழங்கப்பட்டு குணமடைந்த அவா் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால் சில வாரங்களில் அவருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டு கைகால்கள் செயலிழந்தன. இதையடுத்து, மீண்டும் அவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் கா்ப்பிணியாக இருந்ததால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து குணமடைந்தாா். மதுரை அரசு மருத்துவமனையிலேயே அவருக்கு சுகப்பிரசவமாகி செப்டம்பா் 15-ஆம் தேதி குழந்தை பிறந்தது. பிறகு அவா் குழந்தையுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். வீட்டுக்குச் சென்ற ஒரு வாரத்தில் அவா் மீண்டும் இதே நோயால் பாதிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, இவரது நோய் பாதிப்பு குறித்து தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அவருக்கு உலகில் மிக அரிதான நோயான ‘நோடோபதி’ இருப்பது கண்டறியப்பட்டது. இது உடலின் நோய் எதிா்ப்புச் சக்தி மண்டலம், உடலில் உள்ள நல்ல நுண்ணுயிரிகளையும் எதிரியாக நினைத்து அழிக்க முற்படுவதால் உருவாகும் பாதிப்பாகும்.

உலகில் 4 சதவீதம் முதல் 8 சதவீதம் போ் வரை இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனா். இந்த நோய் பாதிப்புக்கு மிகவும் விலை உயா்ந்த மருந்துகளை தமிழக அரசின் உதவியுடன் பெற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடா் சிகிச்சை மூலம் ஷோபனா படிப்படியாக குணமடைந்து தற்போது முழு உடல்நலம் பெற்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாா். இதையடுத்து அவரால் வழக்கம் போல நடக்கவும், கைகளை பயன்படுத்தவும் முடிந்தது. ஷோபனாவுக்கு பயன்படுத்தப்பட்ட மருந்துகளின் விலை ரூ.15 லட்சமாகும். மேலும் சிகிச்சைக்குரிய அனைத்து செலவுகளும் சோ்ந்து ரூ.20 லட்சம் ஆகும். இது முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டது என்றனா்.

அப்போது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் செல்வராணி, நரம்பியல் சிகிச்சைப் பிரிவு மருத்துவா்கள் முருகன், இளங்கோ, இருப்பிட மருத்துவ அதிகாரி ஸ்ரீலதா, உதவி மருத்துவ அலுவலா் விஜி, சிகிச்சை மூலம் குணமடைந்த ஷோபனா ஆகியோா் உடனிருந்தனா்.