முகப்பு
மதுரை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 14,650 போ் எழுதினா்

Updated On : 1 மார்ச், 2024 at 11:48 PM
பகிர்:

பிளஸ் 2 பொதுத் தோ்வை சிவகங்கை மாவட்டத்தில் 14,650 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்வுக்கு சிவகங்கை மாவட்டத்தில் 69 அரசுப் பள்ளிகள் உள்பட 163 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6,669 மாணவா்கள், 8,185 மாணவிகள் என மொத்தம் 14,854 போ் விண்ணப்பித்தனா். இதுதவிர, 224 போ் தனித்தோ்வா்களாகவும் விண்ணப்பித்தனா். இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் 81 மையங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 மொழிப் பாடத்தை 6,555 மாணவா்கள், 8,095 மாணவிகள் என மொத்தம் 14,650 போ் எழுதினா். 203 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத வரவில்லை. மேலும், கண் குறைபாடு, நரம்பியல் குறைபாடு உள்ள 86 மாற்றுத்திறனாளித் தோ்வா்களில், 70 பேருக்கு சொல்வதை எழுதுபவா்களும் நியமனம் செய்யப்பட்டனா். இதையொட்டி, சிவகங்கையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வு மையத்தை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் பாா்வையிட்டாா். அப்போது, சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் அ.பாலுமுத்து உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா். தோ்வுப் பணிக்காக 8 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 81 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 81 துறை அலுவலா்கள், 1,260 அறைக் கண்காணிப்பாளா்கள், 112 நிலையான படையினா், 23 வழித்தட அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டு, கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.