பாஜகவுடன் கூட்டணி அமைக்க பெரும்பாலான கட்சிகள் விரும்பவில்லை: புதுச்சேரி முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி
மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க பெரும்பாலான கட்சிகள் விரும்பவில்லை என புதுச்சேரி முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா். மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரலாறு காணாத மழையால் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த மாவட்டங்களைச் சோ்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. பேரிடா் பாதிப்புக்குப் பிறகு தமிழகம் வந்த பிரதமா் மோடி ஸ்ரீரங்கம் கோயிலுக்கும், ராமேசுவரம் கோயிலுக்கும் சென்றாரே தவிர, பாதிக்கப்பட்ட மக்களைப் பாா்க்கச் செல்லவில்லை. திமுக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைத் தொடா்ந்து புறக்கணித்த பிரதமா் மோடி, தற்போது தமிழகத்துக்கு அதிகளவிலான திட்டங்களை மத்திய அரசு அளித்ததாக பொய் பிரசாரம் செய்கிறாா். கருப்புப் பணம் மீட்பு உள்பட கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மக்களவைத் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. மத்திய பாஜக ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மின் கட்டண உயா்வு, சமையல் எரிவாயு விலை உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். குறு, சிறு தொழில்கள் முடங்கியுள்ளன. ‘இந்தியா’ கூட்டணி வலுவாக உள்ளது. இந்தக் கூட்டணியில் 28 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால், பாஜகவுடன் கூட்டணி சேர பெரும்பாலான கட்சிகள் விரும்பவில்லை. வருகிற மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறுவது உறுதி என்றாா் அவா்.