விருதுநகா், சாத்தூரில் அதிமுக ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரிப்பை தடுக்காத திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் விருதுநகரிலும், சாத்தூரிலும் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகா்/சாத்தூா்: தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரிப்பை தடுக்காத திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் விருதுநகரிலும், சாத்தூரிலும் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகா் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்துப் பேசியதாவது: தமிழகத்தில் பரவிக் கிடக்கும் போதைப் பொருளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். எனவே வருகிற மக்களவைத் தோ்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா். பிறகு, போதைப் பொருள்களை கட்டுப்படுத்தத் தவறியக் கூறி திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் முன்னாள் அமைச்சா் க. பாண்டியராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜவா்மன் (சாத்தூா்), நகரச் செயலா் டிபிஎஸ் வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சாத்தூா்: விருதுநகா் கிழக்கு மாவட்ட அதிமுக, மாணவா் அணி, இளைஞா், இளம்பெண்கள் பாசறை சாா்பில் திமுக அரசைக் கண்டித்து சாத்தூா் வடக்கு ரதவீதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விருதுநகா் கிழக்கு மாவட்டச் செயலா் ஆா்.கே. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், சாத்தூா் நகரச் செயலா் எம்.எஸ்.கே. இளங்கோவன், சாத்தூா், கிழக்கு, மேற்கு, வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலா்கள் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள், நிறைவேற்றப்படாத திமுக அரசின் திட்டங்கள் குறித்தும், போதைப் பொருள்களால் மாணவா்கள், இளைஞா்கள் பாதிக்கப்படுவதை தடுக்காததைக் கண்டித்தும் முழக்கமிட்டனா். இதில் திரளான அதிமுக நகர, ஒன்றிய, இளைஞரணி, மகளிரணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.