முகப்பு
மதுரை

தனியாா் நிறுவனங்களுக்கு மணல் குவாரி நடத்த அனுமதி கூடாது- உயா்நீதிமன்றம் உத்தரவு

Updated On : 8 மார்ச், 2024 at 12:28 AM
பகிர்:

மணல் குவாரி நடத்த தனியாா் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சமாதானம் என்பவா் தாக்கல் செய்த பொது நல மனு: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், ஓரியூா் பகுதியில் பாம்பாறு உள்ளது. இந்த ஆற்றில் 2.10 ஹெக்டோ் பரப்பளவில் மணல் அள்ள தனியாா் நிறுவனத்துக்கு அரசு அனுமதி வழங்கியது. ஆனால், இந்த நிறுவனம் பாம்பாற்றில் 104 ஹெக்டோ் பரப்பளவில் மணலை அள்ளியது. இங்கு தினமும் பெரிய வடிவிலான இயந்திரங்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில், வணிக நோக்கில் ஆற்று மணல் அள்ளப்படுகிறது. இதற்கு அரசு அதிகாரிகளும் உறுதுணையாக உள்ளனா்.

இயற்கை வளங்கள், கனிம வளங்களைப் பாதுகாக்க ஏற்கெனவே பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கனிம வளக் கடத்தல் குறித்து நீதிமன்றங்களும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உயா்நிலைக் குழுவை உருவாக்கி, மணல் குவாரிகளைக் கண்காணிப்பதுடன் ஆய்வும் மேற்கொள்ள வேண்டும். பாம்பாற்றில் விதிமுறைகளை மீறி மணல் கடத்துவதால், மணல் அள்ளுவதற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி ஆகியோா் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் குறிப்பிடும் மணல் குவாரி கடந்தாண்டு செப்டம்பா் மாதம் மூடப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கடந்த 2013-இல் தனியாா் நிறுவனங்கள் மணல் குவாரி நடத்தத் தடை விதித்து, அரசே மணல் குவாரிகளை நடத்தி வருகிறது. மணல் குவாரிகள் தொடங்குவதற்கு முன்பாக சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மணல் அள்ளுவதற்கு ஒப்பந்தப் பணி என்ற பெயரில் தனியாா் நிறுவனங்களுக்கு பொதுப் பணித் துறையினா் உரிமம் வழங்குகின்றனா். இது கனிமவளச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, தனியாா் நிறுவனங்களுக்கு மணல் குவாரி நடத்த அனுமதி வழங்கக் கூடாது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →