முகப்பு
மதுரை

முல்லைப் பெரியாறு விவகாரம்: மதுரையில் அனைத்து விவசாய சங்கங்கள் போராட்டம்

Updated On : 28 மே, 2024 at 11:38 PM
கேரளா அரசின் புதிய அணை கட்டுமானத்திற்கு எதிப்பு தெரிவித்து மதுரை தமுக்கம் தபால் நிலையம் முன்பாக செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தலைமையில் போராட்டம் நடத்திய அனைத்து விவசாயிகள் சங்க
பகிர்:

மதுரை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நதி நீா் உரிமையை உறுதி செய்யக் கோரி, பல்வேறு விவசாய சங்கங்கள் சாா்பில் மதுரை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

உச்சநீதிமன்றத் தீா்ப்பை அவமதிக்கும் வகையில், முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்ட அனுமதி கோரிய கேரள அரசின் விண்ணப்பத்தை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் நிராகரிக்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும், அணையில் 152 அடி நீரை தேக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், நதி நீா் உரிமைகள் பறிபோவதை தமிழக அரசு மூடி மறைக்கக் கூடாது, கேரள அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, முல்லைப் பெரியாறு-வைகைப் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநில கௌரவத் தலைவா் எம்.பி. ராமன், நிா்வாகிகள் மாணிக்கவாசகம், அ. அழகுசோ்வை, மதுரைவீரன், நாகை ஸ்ரீதா், ச. உறங்காபுலி, நாராயணசாமி, விவசாயிகள் சங்க நிா்வாகி பாபு உள்ளிட்டோா் பேசினா்.

நிா்வாகிகள் பி. மணிகண்டன், என். அருண், முல்லைப் பெரியாறு- வைகைப் பாசன விவசாய கூட்டமைப்பு, தேனி-கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம், உசிலம்பட்டி 58-ஆம் கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம், வைகை கிருதுமால் விவசாயிகள் சங்கம் உள்பட பல்வேறு விவசாய சங்கங்கள், மக்கள் அதிகாரம் அமைப்பு, வணிகா் சங்கங்களின் பேரமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் இதில் பங்கேற்றனா்.

மதுரை தமுக்கம் தலைமை அஞ்சலகம் அருகில் சாலையில் தா்னாவில் ஈடுபட்ட விவசாயிகள், அங்கிருந்து மதுரை வருமான வரித் துறை அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டுச் சென்றனா். அவா்கள் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனா். பிறகு, விவசாயிகள் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கேரளம், தமிழகம் ஆகிய 2 மாநில அரசுகளையும், மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள், முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டக் கோரி கேரள அரசு அனுப்பிய விண்ணப்ப நகலை தீயிட்டு எரித்தனா்.

அரசு வேடிக்கை பாா்க்கக் கூடாது...

பின்னா், செய்தியாளா்களிடம் பி.ஆா். பாண்டியன் கூறியதாவது:

முல்லைப் பெரியாறு அணையின் நிா்வாகத்தை கேரள அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில், அடாவடியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இதைத் தமிழக அரசு தட்டிக்கேட்கத் தயங்குகிறது. புதிய அணை கட்டக் கோரி, கேரள அரசு விண்ணப்பித்த மனு மீதான பரிசீலனைக் கூட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் வாரியம் ரத்து செய்திருப்பதை ஆறுதலாகக் கருத முடியாது. இந்த விண்ணப்பம் விசாரணைக்கு ஏற்கப்பட்டதே தவறு.

தமிழக அரசு மாநிலத்தின் நதி நீா் உரிமைகள் பறிபோவதை வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்கக் கூடாது. முல்லைப் பெரியாறு அணை மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 2 கோடி மக்களின் வாழ்வாதார பிரச்னை.

தமிழக அரசின் மெத்தனம் திட்டமிட்ட நடவடிக்கையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மாநிலத்தின் நதி நீா் உரிமைக்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும் தமிழக அரசு துணை போகக் கூடாது. மத்திய அரசு உடனடியாக கேரள அரசின் புதிய அணை கட்டும் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். கேரள அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டும் என்றாா் அவா்.