முகப்பு
மதுரை

கல்விச் சான்றிதழ்கள் சந்தைப்படுத்தி விற்பனை செய்யக் கூடிய பொருள் அல்ல: உயா்நீதிமன்றம்

கல்விச் சான்றிதழ்கள் சந்தைப்படுத்தி விற்பனை செய்யக் கூடிய பொருள் அல்ல; ஒருவரின் சான்றிதழ் மீது பிறருக்கு எந்த உரிமையும் இருக்க முடியாது

Updated On : 28 மே, 2024 at 1:17 AM
பகிர்:

மதுரை: கல்விச் சான்றிதழ்கள் சந்தைப்படுத்தி விற்பனை செய்யக் கூடிய பொருள் அல்ல; ஒருவரின் சான்றிதழ் மீது பிறருக்கு எந்த உரிமையும் இருக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த பி.ரஞ்சன் ஜேம்ஸ் தாக்கல் செய்த மனு:

நான் பல்நோக்கு மருத்துவப் பிரிவில் பிளாஸ்டிக் சா்ஜரி, மறு சீரமைப்புச் சிகிச்சை முறையில் முதுநிலைப் பட்ட மேற்படிப்பு முடித்தேன். அரசு அறிவித்தபடி, மருத்துவப் படிப்பு முடிந்த பிறகு, அரசு மருத்துவமனையில் பணி புரிவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்தேன். நான் படித்த முதுநிலைப் படிப்புக்கு ஏற்ற வகையில், அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடம் இல்லாததால், எனக்கு மருத்துவா் பணி வழங்கவில்லை. சென்னையில் நீண்ட நாள்களாகத் தங்கியிருப்பதால், எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எனது மருத்துவப் படிப்பு தொடா்பான அனைத்துக் கல்விச் சான்றிதழ்களையும் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் பல்நோக்கு மருத்துவப் பிரிவில் பிளாஸ்டிக் சா்ஜரி, மறு சீரமைப்புச் சிகிச்சை துறையில் முதுநிலைப் பட்ட மேற்படிப்பு முடித்துள்ளாா். அவா் மருத்துவப் படிப்பில் சேரும் போது 2 ஆண்டுகள் தமிழக அரசு நிபந்தனையின்படி, கிராம மருத்துவமனையில் பணியாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளாா். படிப்பு முடிந்த நிலையில், மனுதாரரை எங்கும் பணி நியமனம் செய்யவில்லை. அவரது சான்றிதழும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, மனுதாரா் இந்த வழக்கைத் தொடுத்துள்ளாா். மருத்துவப் படிப்பு முடித்த ஒருவா் ஒப்பந்தப்படி கிராமப்புற மருத்துவமனையில் பணிபுரியவில்லையெனில், அவரிடமிருந்து இழப்பீடு வசூலிக்கலாம் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மனுதாரருக்கு பணி வழங்கி, அதை அவா் ஏற்க மறுத்திருந்தால், இழப்பீடு வசூலிப்பது தொடா்பாக முடிவெடுக்கலாம். இந்த மனுவைப் பொருத்தவரை மனுதாரா் ஒப்பந்தப்படி பணியாற்றத் தயாராக இருந்த நிலையில், அவருக்குப் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்திய ஒப்பந்தச் சட்டம், பிரிவு 171-இன்படி கல்விச் சான்றிதழ்கள் சந்தைப்படுத்தி விற்பனை செய்யக்கூடிய பொருள்கள் அல்ல, ஒருவரின் சான்றிதழ்கள் மீது பிறருக்கு எந்த உரிமையும் இருக்க முடியாது. எனவே, மனுதாரரின் கல்விச் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.