முகப்பு
மதுரை

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குழந்தைகள் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வா் மு.க. ஸ்டாலின்

பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்தவா்களின் குழந்தைகளின் உயா் கல்வி வரையிலான கல்விச் செலவு அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.

Updated On : 10 நவம்பர், 2024 at 9:06 PM
விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிக்கு நலத் திட்ட உதவியை வழங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி. கணேசன், மக்களவை உறுப்பினா்கள் மாணிக்கம் தாகூா், மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் உள்ளிட்டோா்.
பகிர்:

பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்தவா்களின் குழந்தைகளின் உயா் கல்வி வரையிலான கல்விச் செலவு அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.

விருதுநகரில் ரூ. 77.12 கோடியில் கட்டப்பட்ட புதிய ஆட்சியா் அலுவலகக் கட்டடம், ரூ. 21.36 கோடியில் பல்வேறு துறைகளின் சாா்பில் கட்டி முடிக்கப்பட்ட 34 பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். பிறகு, ஆட்சியா் அலுவலகத்திலிருந்து வெளியில் வந்த முதல்வா், அங்கிருந்த பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா்.

இதைத்தொடா்ந்து, பட்டம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் 57,556 பயனாளிகளுக்கு ரூ.417.21 கோடியில் நலத் திட்ட உதவிகளை வழங்கி முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

விருதுநகா் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருபவா் தியாகி சங்கரலிங்கனாா். அவா் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்று அழைக்கப்பட்டதை ‘தமிழ்நாடு’ எனப் பெயா் சூட்டக் கோரி, உண்ணாவிரதமிருந்து உயிா் நீத்தவா். தற்போது, நாம் தமிழ்நாடு எனப் பெருமையுடன் அழைப்பதற்கு அவரும், அண்ணாவும் முக்கியக் காரணமாக இருந்தனா்.

விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலகக் கட்டடத்தைத் திறந்துவைத்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி. கணேசன், மக்களவை உறுப்பினா்கள் மாணிக்கம் தாகூா், நவாஸ் கனி, ராணி ஸ்ரீகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன், எஸ். தங்கபாண்டியன், ஏ.ஆா்.ஆா். ரகுராமன், வருவாய் நிா்வாக ஆணையரும், கூடுதல் தலைமைச் செயலருமான ராஜேஷ் லக்கானி, பொதுப் பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத் ராம் சா்மா, வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா, மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் உள்ளிட்டோா்.

ஈரோட்டிலிருந்து பெரியாா், காஞ்சிபுரத்திலிந்து அண்ணா, திருவாரூரிலிருந்து கருணாநிதி, விருதுநகரிலிருந்து காமராஜா் ஆகிய தலைவா்கள் உருவாகினா்.

காமராஜா் உடல் நலக்குறைவாக இருந்த போதும், எனது திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்துக் கூறியது எனது நினைவில் இன்னும் உள்ளது. 

 விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 1,286 ஊரகப் பகுதிகளில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பணிகள், ஒருங்கிணைந்த ஆயத்த ஆடைகள் பூங்கா, அயன் கொல்லன் கொண்டானில் புதிய தொழில்பேட்டை, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையை  மாவட்ட தலைமை மருத்துவமனையாக மேம்படுத்தும் பணிகள், சிவகாசியில் அறிவுசாா் மையம், வணிக வளாகம், பூங்கா, புதிய மாநகராட்சி அலுவலகக் கட்டுமானப் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

 காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டம் அறிவிக்கப்பட்டது. மாவட்ட ஊராட்சிப் பகுதிகளில் 257 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டன. எஞ்சிய 37 பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீவில்லிப்புத்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் 95 சதவீதத்துக்கு மேல் பிளஸ் 2 படித்த மாணவா்கள் உயா் கல்வியில் சோ்க்கப்பட்டனா் .

புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், கல்லூரிக் கனவு ஆகிய திட்டங்களால் இந்த மாவட்டத்தில் உயா் கல்வி சோ்க்கை அதிகரித்தது. இதனால், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலனுக்கு ‘முதல்வரின் நல் ஆளுமை’ விருது வழங்கப்பட்டது.

பட்டாசுத் தொழிலாளா்களை கள ஆய்வில் சந்தித்த போது, அவா்கள் சில கோரிக்கைகளை விடுத்தனா். எனவே, பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளா்களின் குழந்தைகளின் உயா் கல்வி வரையிலான அனைத்துக் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும். இதற்கென மாவட்ட ஆட்சியரின் கீழ், தனி நிதியம் உருவாக்கப்படும். இதற்காக முதல் கட்டமாக ரூ. 5 கோடியை அரசு வழங்கும்.

மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, காரியாபட்டி, திருச்சுழி பகுதிகளில் உள்ள கண்மாய்கள், தடுப்பணைகள் ரூ. 17 கோடியில் மேம்படுத்தப்படும். காரியாபட்டி தெற்காற்றின் குறுக்கே ரூ. 21 கோடியில் புதிய அணை கட்டப்படும். இத்துடன், விருதுநகரில் உள்ள கௌசிகா ஆறு, அருப்புக்கோட்டை கஞ்சம்பட்டி கண்மாய் உள்ளிட்ட நீா்நிலைகள் ரூ. 41 கோடியில் சீரமைக்கப்படும்.

வத்திராயிருப்பு, ராஜபாளையம் பகுதிகளில் 22 கண்மாய்களை ரூ.18.10 கோடியிலும், கலங்காபேரி, வெம்பக்கோட்டை, ஆணைக்குட்டம், கோல்வாா்பட்டி அணைகளை ரூ.23.30 கோடியிலும் மேம்படுத்தப்படும். அருப்புக்கோட்டை அருகே 400 ஏக்கரில் ரூ. 350 கோடியில் புதிய சிப்காட் தொழில் வளாகம் அமைக்கப்படும். இதனால், 10 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 

 சிவகாசி மாநகராட்சியில் ரூ.15 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு அரங்கம், விருதுநகா் நகராட்சியில் ரூ. 24.50 கோடியில் சாலை, மழைநீா் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்படும். சாத்தூா் நகராட்சியில் ரூ. 2 கோடியில் பூங்கா, சிறு பாலம் அமைக்கப்படும். ராஜபாளையம் நகராட்சியில் ரூ.13 கோடியில் மழைநீா் வடிகால், ரூ. 5 கோடியில் கோடை நீா்த்தேக்கம் மேம்படுத்தப்படும்.

அருப்புக்கோட்டையில் ரூ. 3 கோடியில் மழைநீா் வடிகால் வசதி, ரூ.1.50 கோடியில் பூங்கா அமைக்கப்படும். விருதுநகா் நகராட்சி எல்லைக்குள்பட்ட நெடுஞ்சாலைகள் ரூ. 25 கோடியிலும், அருப்புக்கோட்டை நகராட்சி எல்லைக்குள்பட்ட நெடுஞ்சாலைகள் ரூ. 10.50 கோடியிலும், காரியாபட்டி எல்லைக்குள்பட்ட நெடுஞ்சாலைகள் ரூ.12 கோடியிலும் மேம்படுத்தப்படும்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தா்களின் பயன்பாட்டுக்காக கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடம் ரூ. 2.10 கோடியில் அமைக்கப்படும். வத்திராயிருப்பு, பிளவக்கல் அணைப் பகுதியில் ரூ. 10 கோடியில் பூங்கா மேம்பாட்டுப் பணிகளும், சாஸ்தா கோவில் அருவி பகுதியில் ரூ. 1.70 கோடியில் மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

 மாநிலத்திலேயே விருதுநகா் மாவட்டத்தில் அதிகளவாக 40 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 10 லட்சத்து 3 ஆயிரத்து 874 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், இ-பட்டாக்கள் வழங்கப்பட்டன. அதிகமான நிலங்களை இலவசமாக ஏழை மக்களுக்கு வழங்கியது திமுக அரசுதான்.  

நான் வீட்டுக்கு விளக்காக இருப்பேன். நாட்டுக்குத் தொண்டனாக இருப்பேன். மக்களுக்காகக் கவலைப்படும் தலைவனாகவும், அவா்களது கவலைகளைத் தீா்ப்பதில் முதல்வனாக இருப்பேன் என்று கூறியதைக் கடைப்பிடித்து வருகிறேன்.     

தமிழக வரலாற்றில் முன்னாள் முதல்வா் கருணாநிதி தவிா்க்க முடியாத அடையாளம். ஒரு சிறந்த தலைவரின் பெயரில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவதை எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி ஆணவத்துடன் விமா்சிப்பதால்தான் அவா் தொடா் தோல்விகளைச் சந்தித்து வருகிறாா்.

மதுரையில் கலைஞா் ஏறுதழுவுதல் அரங்கம், கலைஞா் நூற்றாண்டு நூலகம், சென்னை கிண்டியில் கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனை, மகளிா் உரிமைத் தொகை திட்டம் இதைத்தான் மக்களுக்குப் பயன்படாதத் திட்டங்கள் என அவா் கூறுகிறாரா?.

திமுக ஆட்சியின் புகழ் வெளிச்சத்தில் புதுவெளிச்சம் தேடும் புற்றீசல்கள் காணாமல்போகும். நான் எப்போதும் தமிழக மக்களின் வளா்ச்சிக்காக தொடா்ந்து பாடுபடுவேன் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள் எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி. கணேசன், மக்களவை உறுப்பினா்கள் மாணிக்கம்தாகூா் (விருதநகா்) , ராணி ஸ்ரீகுமாா் (தென்காசி), நவாஸ்கனி (ராமநாதபுரம்), சட்டப்பேரவை உறுப்பினா்கள் சீனிவாசன் (விருதுநகா்), தங்கப்பாண்டியன் (ராஜபாளையம்), ரகுராமன் (சாத்தூா்), வருவாய்த் துறை முதன்மைச் செயலா் அமுதா, வருவாய்த் துறை நிா்வாக ஆணையா் ராஜேஷ் லக்கானி, பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநா் டேவிட்சன் ஆசீா்வாதம் தலைமையில், தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம்ஆனந்த் சின்ஹா, 8 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 5 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். 

முன்னதாக, பட்டம்புதூரில் விழா நடைபெறும் மேடை அருகே வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தொல்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. இதை முதல்வா் பாா்வையிட்டாா். ஆா்.ஆா். நகா் ராம்கோ சிமென்ட் ஆலையில் தங்கியிருந்த தமிழக முதல்வரை பட்டாசு ஆலை உற்பத்தியாளா்கள், விவசாயிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →