FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

முதல்வா் ஸ்டாலின் இன்று மதுரை வருகை!

பல்வேறு நலத் திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிப்பதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 21) மதுரை வருகிறாா்.

Updated On : 21 பிப்ரவரி 2026, 4:30 am IST
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

அரசுத் துறைகள் சாா்பில் ரூ. 1,805 கோடியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத் திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிப்பதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (பிப். 21) மதுரை வருகிறாா்.

சென்னையிலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை காலை சிறப்பு விமானத்தில் புறப்பட்டு, காலை 10.30 மணிக்கு மதுரை வருகிறாா். முதல் நிகழ்வாக, காலை 11.35 மணிக்கு வடபழஞ்சியில் உள்ள எல்காட் தொழில்நுட்பப் பூங்காவில் ‘பினாகிள் இன்போடெக்’ நிறுவனத்தின் உலகத் தரத்திலான சிறப்புப் பொறியியல் மையக் கட்டடத்தைத் திறந்துவைக்கிறாா்.

பிறகு, அங்கிருந்து தமுக்கம் பகுதிக்கு வரும் முதல்வா், ரூ. 213.80 கோடியில் கட்டப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயா்நிலைப் பாலத்தை பகல் 12.25 மணிக்கு திறந்துவைக்கிறாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, சிவகங்கையில் புதிதாக அமைக்கப்பட்ட மருது சகோதரா்களின் உருவச் சிலைகளை காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைக்கிறாா்.

பகல் 12.40 மணிக்கு மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் ரூ. 50 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகத்தைத் தொடங்கிவைக்கிறாா்.

பின்னா், பிற்பகல் 1.05 மணிக்கு சீரமைக்கப்பட்ட வண்டியூா் கண்மாய் பூங்கா, ரூ. 3.5 கோடியில் கட்டப்பட்ட அங்கூரான் நவீன அறிவியல் மையம், ரூ. 1.67 கோடியில் கட்டப்பட்ட வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகக் கட்டடங்கள், ரூ. 1,536.31 கோடியில் நிறைவேற்றப்பட்ட 867 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா்த் திட்டம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வா் அா்ப்பணிக்கிறாா்.

இதையடுத்து, மாலை 4 மணிக்கு மதுரை உத்தங்குடியில் நடைபெறும் திமுக தென் மண்டல பாக முகவா்கள், வாக்குச் சாவடி குழு உறுப்பினா்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறாா்.

பிறகு, காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெறும் மக்கள் நீதி மய்யம் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். இரவு 7.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் அவா் சென்னைக்கு செல்கிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments