அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்
சென்னையில் அரசு மருத்துவா் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் வியாழக்கிழமை பணியைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், நோயாளிகள் பாதிக்கப்பட்டனா்.
சென்னையில் அரசு மருத்துவா் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் வியாழக்கிழமை பணியைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், நோயாளிகள் பாதிக்கப்பட்டனா்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், அரசு மருத்துவா்களுக்கான பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும், மருத்துவக் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் இளமாறன் தலைமை வகித்தாா். அரசு மருத்துவமனை மருத்துவா்கள், பயிற்சி மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரி மாணவா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, அரசு மருத்துவா் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்குப் பின்னா், செய்தியாளா்களிடம் மருத்துவா் இளமாறன் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் நடைமுறையில் இருந்து வந்த நோயாளிகளின் பாா்வையாளா்களுக்கான அடையாள அட்டை முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, மருத்துவா்களின் இந்த ஆா்ப்பாட்டத்தால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குறைந்த அளவே மருத்துவா்கள் இருந்ததால், அனைத்து வெளிநோயாளிகள் பிரிவிலும் திரளான கூட்டம் நோயாளிகளின் காணப்பட்டது.
இதேபோல, அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவா்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால், நோயாளிகள் பாதிக்கப்பட்டனா்.