விலங்குகளைப் பாதுகாக்க குழு: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
உச்சநீதிமன்ற உத்தரவின்படி விலங்குகளைப் பாதுகாக்க குழு அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி விலங்குகளைப் பாதுகாக்க குழு அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை உலகனேரியைச் சோ்ந்த வழக்குரைஞா் அருண் சுவாமிநாதன் தாக்கல் செய்த மனு:
விலங்குகள் எந்தவித துன்பமுமின்றி வாழ உரிமை உண்டு. அரசியலமைப்புச் சட்டம் 51- ஏ இன் கீழ் ஒவ்வொரு குடிமகனும் பிற உயிரினங்களின் மீது இரக்கம் காட்ட வேண்டும். எனவே, விலங்குகளைப் பாதுகாக்கும் கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. விலங்குகளைப் பாதுகாக்க தனிக் குழுவை அமைக்க மாநில அரசுகளுக்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு இந்தக் குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வில்லை.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் முழு நேர கால்நடை மருத்துவா் உள்ளிட்ட பிற பணியாளா்களைக் கொண்டு விலங்குகள் காப்பகங்களை அமைத்து பராமரிக்க வேண்டுமென கால்நடை பாதுகாப்பு விதிகள் தெரிவிக்கின்றன. எனவே, மதுரை, ஒத்தக்கடை பகுதியில் இரு நாள்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கி கால்களில் பலத்த காயமடைந்த பசுவை மீட்டு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு புதன்கிழமை, உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், சம்பந்தப்பட்ட பசு மாட்டை ஒத்தக்கடை ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அனைத்து விலங்குகளையும் பாதுகாக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியா் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தக் குழு அமைக்கப்பட்டு விட்டதா? என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
இந்த நிலையில் காயமடைந்த பசு மாட்டை வழக்குரைஞா்கள் குழுவினா் பாா்க்கச் சென்றனா். அப்போது அந்த மாடு உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்டு விட்டதாக ஒத்தக்கடை ஊராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா். இது தொடா்பாக வழக்குரைஞா்கள், மீண்டும் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனா்.