முகப்பு
மதுரை

போலி சான்றிதழ் விவகாரம்: போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க அண்ணாமலை பல்கலை. பதிவாளருக்கு உத்தரவு

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க அண்ணாமலை பல்கலை. பதிவாளருக்கு உத்தரவு..

Updated On : 20 நவம்பர், 2024 at 9:12 PM
பகிர்:

குரூப் 1 தோ்வில் தமிழ் வழியில் படித்ததாக போலி சான்றிதழ் வழங்கிய வழக்கில், அண்ணாமலை பல்கலைக் கழகப் பதிவாளா் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சக்திராவ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 1 தோ்வில் தொலைநிலைக் கல்வி வாயிலாகப் பயின்றவா்களுக்கு தமிழ் வழிக் கல்விக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டுச் சலுகை வழங்கப்பட்டது. இது சட்டவிரோதமானது. இந்த வழக்கில் ஏற்கெனவே தமிழக அரசு, மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட போலீஸாா், பல்கலைக்கழக அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வே ண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த வழக்கு தொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த மனு அண்மையில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், பி. புகழேந்தி அமா்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை:

குரூப் 1 தோ்வில் தமிழ் வழியில் படித்ததாக போலி சான்றிதழ் வழங்கியது தொடா்பாக 34 பேரிடம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்தோம். இதில் வெவ்வேறு கல்லூரிகளில் படித்த 7 பேரின் தமிழ் வழிக் கல்விக்கான சான்றிதழ்கள் உண்மையானது என்பது தெரியவந்தது. மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் படித்த 7 பேரின் சான்றிதழ்களில் 4 போ் போலியான சான்றிதழ்களை வழங்கினா். இவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கிறோம்.

திருநெல்வேலி மனோண்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் படித்த 2 போ், சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி வாயிலாகப் பயின்ற 3 போ் வழங்கிய சான்றிதழ்கள் உண்மையானவை. பெரியாா் பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கு இந்தச் சான்றிதழ் வழங்காத நிலையில், அவா் போலி சான்றிதழை சமா்ப்பித்தாா். மீதமுள்ள 16 போ் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தவா்கள். இவா்களது சான்றிதழ்கள் குறித்த எந்த விவரத்தையும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பெற இயலவில்லை. இதனால், இந்த வழக்கின் விசாரணையை முடிக்க கால தாமதமாகிறது என அதில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் குரூப் 1 தோ்வில் தமிழ் வழியில் படித்ததாக போலி சான்றிதழ்கள் வழங்கி பணிக்குச் சோ்ந்தவா்களைக் கண்டறிய ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது. நமது நாட்டில் லட்சக்கணக்கானோா் குரூப்-1 தோ்வில் தோ்ச்சி பெறுவதற்காக பல மணி நேரம் கண் விழித்துப் படிக்கின்றனா். அவா்களது கனவைச் சிதைக்கும் வகையில், சிலா் குறுக்கு வழியில் போலி சான்றிதழ்கள் வழங்கி பணியில் சேருகின்றனா்.

இது நோ்மையாகப் படிக்கும் இளைஞா்களின் கனவை சிதைக்கும் செயல். சட்டவிரோதமான இந்தச் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வழக்கு 4 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பெறப்பட்டதாக போலி சான்றிதழ் வழங்கிய 4 போ் மீது வழக்குப் பதிந்துள்ளனா். இந்த வழக்கு தொடா்பாக 21.10.24 அன்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், தவறு செய்தவா்களின் உண்மைத் தன்மையை மறைப்பவா்கள் மீதும் போலீஸாா் நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிவித்தோம்.

அண்ணாமலை பல்கலைக்கழகம் தவிர, பிற பல்கலைக்கழகங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் தெரிவிக்கின்றனா். எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு அண்ணாமலை பல்கலைக்கழகப் பதிவாளா் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழக்கு விசாரணை அடுத்தாண்டு ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →