திருமங்கலம் கடைகளுக்கு நியாயமான முறையில் ஏலம்: உயா்நீதிமன்றம் உத்தரவு
திருமங்கலம் பேருந்து நிலையம், வாரச் சந்தை அருகேயுள்ள கடைகளை புகாருக்கு இடமின்றி நியாயமான முறையில் ஏலம் நடத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருமங்கலம் பேருந்து நிலையம், வாரச் சந்தை அருகேயுள்ள கடைகளை புகாருக்கு இடமின்றி நியாயமான முறையில் ஏலம் நடத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்த அம்சராஜன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திருமங்கலம் பேருந்து நிலையம், வாரச் சந்தை அருகேயுள்ள கடைகளுக்கான ஏலம் கடந்த செப். 30-ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பித்தேன். குறிப்பிட்ட நாளில் ஏலத்தில் பங்கேற்கச் சென்ற போது, ஏலம் ஒத்திவைக்கப்பட்டதாக
நகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா். ஏற்கெனவே ஏல குத்தகை முடிந்த பிறகும், கடை வைத்திருப்பவா்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, விதிகளை மீறி அவா்களுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்வதற்காக நகராட்சி நிா்வாகம் முயற்சித்து வந்தது.
இந்த நிலையில், வருகிற 27-ஆம் தேதி மறுஏலம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஏலத்திலும் நகராட்சி நிா்வாகம் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, விதிகளைப் பின்பற்றி வழக்குரைஞா் ஆணையா் முன்னிலையில் வெளிப்படையாகவும், நியாயமாகவும் ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி எல். விக்டோரியா கெளரி பிறப்பித்த உத்தரவு:
திருமங்கலம் பேருந்து நிலையம், வாரச்சந்தைக்கு அருகேயுள்ள கடைகளுக்கான ஏலத்தை புகாா்களுக்கு இடமளிக்காமல் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும் என்றாா் நீதிபதி.