முகப்பு
மதுரை

விசாரணை செய்யாத வழக்குகள்: நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு

விசாரணை செய்யாத வழக்குகள்: நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு

Updated On : 18 அக்டோபர், 2024 at 12:49 AM
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும் விசாரணைக்கு எடுக்கப்படாமல் உள்ள வழக்குகள் எத்தனை?. இதற்கான காரணம் குறித்து மதுரை உயா்நீதிமன்ற அமா்வுக்கு உள்பட்ட 14 மாவட்ட நீதிமன்றங்களின் முதன்மை நீதிபதிகள், தெற்கு, மத்திய மண்டல காவல் துறைத் தலைவா்கள் (ஐ.ஜி.), மதுரை, திருச்சி, திருநெல்வேலி காவல் ஆணையா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த ஜனாா்த்தனன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுவில், தனக்கு எதிராக போலீஸாா் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, மனுதாரா் மீதான வழக்கில் போலீஸாா் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இதை எதிா்த்து மனுதாரா் வழக்கு தொடுக்கலாம் என உத்தரவிட்டது.

இந்த மனுவை வியாழக்கிழமை மீண்டும் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி முரளிசங்கா் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் போலீஸாா் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாததால், மனுதாரா் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு மீண்டும் வழக்கு தொடுத்துள்ளாா். இந்த வழக்கு தொடா்பான குற்றப்பத்திரிகை கடந்த ஏப். 22-ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை மனுதாரா் தரப்பு மறுக்கின்றனா். வழக்கை தாமதப்படுத்தும் வகையில், நீண்ட காலமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் உள்ளதோ என சந்தேகம் எழுகிறது.

காவல் துறை, நீதிமன்றம் ஆகிய இரு தரப்பிலும் இணைய வழியில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதை (இ- பைலிங்) முறையாகப் பின்பற்ற வேண்டும். இதில் குறைபாடுகள் இருப்பதால், ஒருவரையொருவா் குற்றம் சுமத்துகின்றனா். இதில் உள்ள தவறுகளைக் கண்டறிந்து சரிசெய்ய இரு தரப்பிலும் விவரங்களைப் பெற உயா்நீதிமன்றம் விரும்புகிறது.

கடந்த ஓராண்டாக நீதித் துறை நடுவா் மன்றம், குற்றவியல் நீதிமன்றங்களில் இணைய வழியில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் எத்தனை?. இவற்றில் எத்தனை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன?. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும் விசாரணைக்கு எடுக்கப்படாமல் உள்ள வழக்குகள் எத்தனை?. இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து மதுரை உயா்நீதிமன்ற அமா்வுக்கு உள்பட்ட 14 மாவட்ட நீதிமன்றங்களின் முதன்மை நீதிபதிகள், தெற்கு, மத்திய மண்டல காவல் துறைத் தலைவா்கள் (ஐ.ஜி.), மதுரை, திருச்சி, திருநெல்வேலி காவல் ஆணையா்கள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

முழு கட்டுரையைப் படிக்க →