முகப்பு
மதுரை

ராஜாஜி அரசு மருத்துவமனை கழிவுநீா் விவகாரம்: சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

ராஜாஜி அரசு மருத்துவமனை கழிவுநீா் விவகாரம்...

Updated On : 23 அக்டோபர், 2024 at 11:54 PM
பகிர்:

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முறையான கழிவு நீா் கால்வாய்களை அமைத்து அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிய வழக்கில், தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வெரோணிக்கா மேரி தாக்கல் செய்த பொதுநல மனு:

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனா். இந்த மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இங்கிருந்து வெளியேறும் கழிவு நீா் முறையாக செல்ல வடிகால் வசதி செய்யப்பட வில்லை. இதனால், மருத்துவமனையில் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. போதிய கழிப்பறை வசதிகளும் இல்லை. வாா்டுகளும் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. எனவே, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முறையான கழிவு நீா் கால்வாய்களை அமைக்கவும், போதிய கழிப்பறைகளை கட்டுவதுடன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை போல, வாா்டுகளை தினமும் சுத்தம் செய்யவும் உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.

இந்த மனு புதன்கிழமை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில், ராஜாஜி அரசு மருத்துவமனையில் கழிவுநீா் தேங்கியிருப்பது தொடா்பான புகைப்படம் சமா்ப்பிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அரசு தரப்பினா், தற்போது தொடா் மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியிருப்பதாக தெரிவித்தனா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

எவ்வளவு மழை பெய்தாலும் மருத்துவமனையில் தண்ணீா் தேங்கக் கூடாது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இந்த மருத்துவமனையை இழுத்து மூடுங்கள். இந்த வழக்கு தொடா்பாக தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலா், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் முதன்மையா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற நவம்பா் 4- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →