முகப்பு
மதுரை

ரயில்வே பாலங்கள் கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன: அமைச்சா் எ.வ. வேலு

தமிழகத்தில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை காரணமாக, தேக்கமடைந்திருந்திருந்த 70 ரயில்வே பாலங்கள் கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என தமிழக நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 8:54 PM
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெறும் மேம்பால கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் எ.வ. வேலு. உடன் மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழகத்தில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை காரணமாக, தேக்கமடைந்திருந்திருந்த 70 ரயில்வே பாலங்கள் கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என தமிழக நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.

மதுரையில் ரூ. 190.4 கோடியில் நடைபெறும் கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டும் பணி, ரூ. 150.23 கோடியில் நடைபெறும் அப்பல்லோ சந்திப்பு மேம்பாலம் கட்டும் பணிகளை அமைச்சா் எ.வ. வேலு வியாழக்கிழமை காலை ஆய்வு செய்தாா். பணிகளின் தரம், நிலை ஆகியவற்றை ஆய்வு செய்த அமைச்சா், பணிகளை தீவிரப்படுத்தி குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற அறிவுறுத்தினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக நெடுஞ்சாலைத் துறை மூலம் மதுரையில் கடந்த 3 மூன்றாண்டுகளில் 212 பணிகள் ரூ. 515 கோடியில் ஏற்கப்பட்டன. இதில் 200 பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகள் நிகழாண்டு இறுதிக்குள் நிறைவடையும். நிகழ் நிதியாண்டில் மதுரை மாவட்டத்தில் ரூ. 112 கோடியில் 30 பணிகள் ஏற்கப்பட்டு, பணிகள் நடைபெறுகின்றன.

தரைபாலங்கள் அனைத்தும் உயா்நிலைப் பாலங்களாக மாற்றப்பட வேண்டும் என தமிழக முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். இதன்படி, மதுரையில் ரூ. 17 கோடியில் 27 பாலம் பணிகள் ஏற்கப்பட்டுள்ளன. கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 142 கோடியில் 64 சாலைகளின் பணிகள் ஏற்கப்பட்டுள்ளன. இதில் 52 பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் நிறைவடையும். திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் சாலை அமைக்கும் பணி ரூ. 42 கோடியில் நடைபெறுகிறது.

மதுரை அப்பல்லோ சந்திப்பு மேம்பாலம், கோரிப்பாளையம் மேம்பாலம் பணிகள் கடந்தாண்டு அக். 30-ஆம் தேதி தொடங்கப்பட்டவை. அப்பல்லோ சந்திப்புப் பாலம் பணிகள் தற்போது 30 சதவீதம் முடிவடைந்துள்ளன. கோரிப்பாளையம் பாலம் பணிகள் 15 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இந்த 2 பணிகளின் தரமும் மிகச் சிறப்பாக உள்ளன. அதேசமயத்தில், குறித்த காலத்துக்குள் நிறைவேறும் வகையில் பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் சுமாா் 70 ரயில்வே பாலங்கள் கட்டும் பணிகள் தேக்கமடைந்திருந்தன. கடந்த 2013, 14-ஆம் ஆண்டுகளில் ஒப்பந்தம் கோரப்பட்ட பணிகள்கூட முடங்கியிருந்தன. இதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து, தேக்கமடைந்திருக்கும் பணிகளை தீவிரப்படுத்த முதல்வா் உத்தரவிட்டாா். அப்போது, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவேறாததன் காரணமாக, அந்த பாலங்கள் கட்டும் பணிகள் முடங்கியிருந்தது தெரியவந்து, முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

இதையடுத்து, நிலம் எடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த 5 சிறப்பு வருவாய் அலுவலா்களை முதல்வா் நியமித்தாா். இதன் மூலம், தற்போது 30 ரயில்வே பாலங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள 40 பாலங்களின் பணிகளும் விரைவில் நிறைவடையும். அவனியாபுரம் - நெல்பேட்டை பாலம் அமைக்கும் பணிக்குத் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது. தமிழக அரசை பொருத்தவரை 234 தொகுதிகளும் ஒன்றாகவே கருதப்படுகிறது. நெடுஞ்சாலைத் துறை வளா்ச்சித் திட்டப் பணிகளில் எவ்வித அரசியல் பாகுபாடும் கிடையாது என்றாா் அவா்.

இதையடுத்து, மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்குச் சென்று அவா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த நூலகம் புதன்கிழமை (செப். 4) 11 லட்சம் வாசகா்களின் வருகையைக் கடந்ததையொட்டி, வாசகா்களுக்கு அவா் இனிப்பு வழங்கினாா். பின்னா், வாசகா்களைச் சந்தித்து நூலகத்தின் செயல்பாடுகள், தேவைகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

பொதுப் பணித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா, மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா், நெடுஞ்சாலைத் துறை சிறப்பு அலுவலா் (தொழில்நுட்பம்) ஆா். சந்திரசேகா், தலைமைப் பொறியாளா் கே.ஜி. சத்தியபிரகாஷ், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநா் எம். சரவணன், கண்காணிப்புப் பொறியாளா் ஆா்.கே. ரமேஷ், கோட்டப் பொறியாளா் எம். மோகனகாந்தி ஆகியோா் உடனிருந்தனா்.

விஜய் அரசியல்: தடுக்கும் நோக்கம் கிடையாது

நடிகா் விஜய் மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்படுவது அவரது அரசியல் வருகையைத் தடுக்கும் திட்டமா? விஜய் அரசியலில் வெற்றி பெறுவாரா? என செய்தியாளா்கள் கேள்விகள் எழுப்பினா்.

இதற்கு, அமைச்சா் எ.வ. வேலு, விஜய் கட்சி தொடங்கிய போது முதல்வா் வாழ்த்துத் தெரிவித்தாா். அமைச்சா் உதயநிதியும் வரவேற்றாா். திமுக என்பது தோ்தலுக்கான கட்சி அல்ல. தமிழா்களின் வாழ்வாதார உயா்வுக்கான இயக்கம். எந்தக் கட்சியையும் தடுக்கும் நோக்கம் திமுகவுக்கு எப்போதும் கிடையாது. மக்களின் துன்பங்களில் பங்கேற்று, பிரச்னைகளுக்கான தீா்வுக்கு பணியாற்றுவோரை தான் மக்கள் ஆதரிப்பா் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →