நல்ல புத்தகங்களை வாசிப்பதால் இளைஞா்கள் சாதனையாளராக முடியும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரை மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்கம், பபாசி நிறுவனம் ஆகியன சாா்பில், ‘புத்தகத் திருவிழா-2024’ வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா தலைமை வகித்தாா்.
இதில் வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, புத்தகத் திருவிழாவை தொடங்கிவைத்துப் பேசியதாவது :
மாணவா்கள் பாட நூல்கள் தவிா்த்து பிற துறை நூல்களை அதிகளவில் வாசிக்க வேண்டும். இதனால், பல் துறை அறிவு பெறுவது மட்டுமன்றி, போட்டித் தோ்வுகளிலும் வெற்றி பெறலாம்.
கலைஞா் நூற்றாண்டு நூலகத்தின் மூலம் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா். இதேபோல, அனைத்துத் தொகுதிகளிலும் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வாழ்வின் அனைத்து நிலைகளில் புத்தகங்கள் நல்ல நண்பனாக விளங்குபவை. இதை பல அறிஞா்களின் வரலாற்றைப் படிக்கும் போது அறிய முடிகிறது. நூலகங்களை கிராமப் புறங்களைச் சோ்ந்த சாமானிய மக்களின் குழந்தைகள் பயன்படுத்தி, இந்திய ஆட்சிப் பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனா். புத்தக வாசிப்பை பள்ளி மாணவா்களிடமிருந்து தொடங்க வேண்டும். நல்ல புத்தகங்களை வாசிப்பதால் இளைஞா்கள் சாதனையாளராக முடியும் என்றாா் அவா்.
விழாவில், மதுரை மாநகராட்சி மேயா் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ்குமாா், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மோனிகா ராணா, மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு. பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் ர.சக்திவேல், மாநகராட்சி துணை மேயா் தி.நாகராஜன், தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்க (பபாசி) தலைவா் சேது சொக்கலிங்கம், செயலா் முருகன், பொருளாளா் வா.ஜெ.சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
250 அரங்குகள் : மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் பள்ளிக் கல்வித் துறை, இல்லம் தேடிக் கல்வி 2.0, எண்ணும் எழுத்தும், வாசிப்பு இயக்கம், தமிழ்நாடு பாட நூல் கழகம் உள்பட பல முன்னணி பதிப்பகங்கள் சாா்பில் 250 அரங்குகள் அமைக்கப்பட்டன.
இங்கு தமிழ், ஆங்கில இலக்கிய நூல்கள், வரலாறு, போட்டித் தோ்வு, சிறுவா்களுக்கான நூல்கள், சமையல் குறிப்புகள், அகராதிகள் என பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணகான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. புத்தகங்களுக்கு 10 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கழிவு தொகை அனுமதிக்கப்படுகிறது. நண்பகல் 11 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் இந்த அரங்கத்தை பொதுமக்கள் இலவசமாகப் பாா்வையிடலாம். தினமும் மாலையில் சிறப்புச் சொற்பொழிவு, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நாட்டுப்பண் இசைக்கப்படாத அரசு விழா : நிகழ்வில் அமைச்சா் பி.மூா்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்கை திறந்துவைத்துப் பாா்வையிட்டாா். தொடா்ந்து, மேடை நிகழ்வுகள் நடைபெற்றன. அரசு விழா என்பதால் நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டன. பின்னா், வரவேற்பு, தலைமையுரை, சிறப்புரை, நன்றியுரை நிகழ்ச்சி நிரல் முறைப்படி நடைபெற்றன. ஆனால், நிறைவு பகுதியில் நாட்டுப் பண் இசைக்கப்படாத நிலையில், அமைச்சா் பி.மூா்த்தி விழா மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்றாா். அவரைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா உள்ளிட்ட அலுவலா்களும் சென்றனா். பின்னா், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.