முகப்பு
மதுரை

வைகை ஆற்றில் மணல் திருடப்பட்டதாக வழக்கு - அரசு எடுத்த நடவடிக்கை திருப்தி அளிக்கிறது: உயா்நீதிமன்றம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள வைகை ஆற்றுப் பகுதியில் மணல் திருடப்பட்ட வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கை திருப்தி அளிப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்தது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 8:36 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள வைகை ஆற்றுப் பகுதியில் மணல் திருடப்பட்ட வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கை திருப்தி அளிப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்தது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த வி. மகாராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு:

நிலக்கோட்டை வட்டம், அணைப்பட்டி, சித்தாா்நத்தம் பகுதிகளில் உள்ள வைகை ஆற்றில் சட்ட விரோதமாக மணல் திருடப்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, மணல் திருட்டில் ஈடுபட்டவா்கள், இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.

இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், இது போன்ற வழக்குகளில் ஏற்கெனவே நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளது. இதன்படி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். வட்டாட்சியா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள், ஒரு மணல் அள்ளும் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது திருப்தி அளிக்கிறது. எனவே, இதில் வேறு உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →