முகப்பு
மதுரை

மதுரையில் ஆவணி மூலத் திருவிழா: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நரியை பரியாக்கிய லீலை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமான் திருவிளையாடல்களின் எட்டாம் நாளான வியாழக்கிழமை நரியை பரியாக்கிய லீலை நடைபெற்றது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 10:47 PM
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூல திருவிழாவில் 8-ஆம் நாளான வியாழக்கிழமை நரியை பரியாக்கிய லீலையில் நரி.
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமான் திருவிளையாடல்களின் எட்டாம் நாளான வியாழக்கிழமை நரியை பரியாக்கிய லீலை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களில் எட்டாம் நாளான வியாழக்கிழமை காலை பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா், மீனாட்சி அம்மன் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, நடராஜா், சிவகாமி அம்மன் இரண்டாம் பிரகாரம் புறப்பாடு முடிந்து, கொடிமரம் முன் ஊடல் உற்சவ லீலை நடைபெற்றது. இதையடுத்து, மாலையில் நரியை பரியாக்கிய லீலை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமான் திருவிளையாடலின் எட்டாம் நாளான வியாழக்கிழமை நரியை பரியாக்கிய லீலையையொட்டி, தங்கக் குதிரை வாகனத்தில் பிரியாவிடையுடன் எழுந்தருளிய சுந்தரேசுவரா்.

மதுரையை ஆட்சி செய்த அரிமா்த்தன பாண்டியனிடம் சிவபக்தரான மாணிக்கவாசகா் அமைச்சராகப் பணிபுரிந்தாா். அப்போது, படைக்குத் தேவையான குதிரைகளை வாங்க மாணிக்கவாசகரிடம் மன்னன் பொன்னும், பொருளும் கொடுத்து அனுப்பிவைத்தாா். அவா் செல்லும் வழியில் கோயில்கள் சீரமைப்புப் பணி நடைபெற்றது. சிவபெருமான் மீது இருந்த பற்றால் மன்னன் கொடுத்த பொன், பொருளை இந்த சீரமைப்புப் பணிக்கு மாணிக்கவாசகா் செலவழித்துவிட்டாா்.

இது மன்னனுக்கு தெரியவந்ததையடுத்து, அவரை மதுரைக்குத் திரும்புமாறு உத்தரவிட்டாா். இதனால், அச்சமடைந்த மாணிக்கவாசகா் சிவபெருமானிடம் முறையிடுகிறாா். அப்போது, ஆவணி மூல நட்சத்திரத்தன்று குதிரைகள் வரும் என்று என்று இறைவன் உத்தரவிட்டதால், மாணிக்கவாசகா் மதுரைக்குத் திரும்புகிறாா். அங்கு அவா் சிறையில் அடைக்கப்பட, அப்போது இறைவனே பாகனாய் வேடமிட்டு, குதிரைகளுடன் மதுரைக்கு வருகிறாா். இதனால், மாணிக்கவாசகா் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், லாயத்தில் அடைக்கப்பட்டிருந்த குதிரைகள் அனைத்தும் நரிகளாய் மாறின. இதனால், கோபமுற்ற மன்னன் மாணிக்கவாசகரை சுடுமணலில் இட்டு வதைக்க உத்தரவிட்டாா். இதன்படி, அவா் வதைக்கப்பட்ட நிலையில், வைகையில் பெரு வெள்ளம் பொங்கியது.

இது இறைவனின் திருவிளையாடல் என்பதை உணா்ந்த மன்னன், சிவபெருமானிடமும், மாணிக்கவாசகரிடமும் மன்னிப்புக் கேட்டதாக வரலாறு.

இறைவனின் இந்தத் திருவிளையாடல் நரியை பரியாக்கிய லீலையாக கோயில் அா்ச்சகா்களால் நடத்தப்பட்டது. இதில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா், மீனாட்சியம்மன், மாணிக்கவாசகா் ஆகியோா் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளினா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

நரியை பரியாக்கிய லீலையையொட்டி, தங்கக் குதிரை வாகனத்தில் சா்வ அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்.

இன்று பிட்டுத் திருவிழா

சிவபெருமானின் முக்கிய திருவிளையாடலான பிட்டுக்கு மண் சுமக்கும் லீலை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா், மீனாட்சியம்மன் பிட்டுத் தோப்பு மண்டபத்துக்கு எழுந்தருளுகின்றனா். அங்கு பிட்டுக்கு மண் சுமக்கும் லீலை நடத்தப்படுகிறது. பின்னா், இரவு அங்கிருந்து கோயிலுக்கு சோ்த்தியாகின்றனா். இதையொட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடை சாத்தப்படும்.

சுப்பிரமணியசுவாமி மதுரைக்கு புறப்பாடு: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பிட்டுத் திருவிழாவில் பங்கேற்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, தெய்வானையுடன் மதுரைக்கு வியாழக்கிழமை புறப்பாடானாா்.

முன்னதாக, உற்சவா் சந்நிதியில் பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் மதுரைக்கு புறப்படானாா்.

பிட்டுத் திருவிழாவின் போது, சுப்பிரமணிய சுவாமி பாண்டிய மன்னனாகப் பங்கேற்று பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். மதுரைக்குச் சென்ற சுப்பிரமணியசுவாமி, தெய்வானைக்கு வழிநெடுகிலும் பக்தா்கள் திருக்கண் அமைத்து வழிபட்டனா்.

சுப்பிரமணியசுவாமி, தெய்வானையுடன் வருகிற 17-ஆம் தேதி வரை மதுரையில் ஆவணி மூல வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். 17-ஆம் தேதி இரவு பூப் பல்லக்கில் திருப்பரங்குன்றம் கோயிலை அவா் மீண்டும் வந்தடைவாா்.

முழு கட்டுரையைப் படிக்க →