முகப்பு
மதுரை

மதுரை மாட்டுத்தாவணி நுழைவு வாயில் விவகாரம்: ஆா்.பி. உதயகுமாருக்கு அபராதம் விதிக்க நேரிடும் - உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள நக்கீரா் நுழைவு வாயிலை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து, இடையீட்டு மனு தாக்கல் செய்த தமிழக எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாருக்கு அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு எச்சரித்தது.

மதுரை

மதுரை மாட்டுத்தாவணி நுழைவு வாயில் விவகாரம்: ஆா்.பி. உதயகுமாருக்கு அபராதம் விதிக்க நேரிடும் - உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள நக்கீரா் நுழைவு வாயிலை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து, இடையீட்டு மனு தாக்கல் செய்த தமிழக எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாருக்கு அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு எச்சரித்தது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 7:34 PM
பகிர்:

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள நக்கீரா் நுழைவு வாயிலை இடிக்க எதிா்ப்புத் தெரிவித்து, இடையீட்டு மனு தாக்கல் செய்த தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாருக்கு அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை எச்சரித்தது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஜைனப் பீவி தாக்கல் செய்த பொது நல மனு:

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே நக்கீரா் நுழைவு தோரண வாயில் அமைந்துள்ளது. இந்த வாயில் வழியாக மட்டுமன்றி, அதன் இருபுறங்களிலும் உள்ள சாலையோரங்கள் வழியாக வாகனங்கள் முந்திச் செல்கின்றன. இதனால், இந்தப் பகுதியில் விபத்துகள் நிகழ்வதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்த நுழைவு வாயிலை அகற்றக் கோரி, அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இந்த நுழைவு வாயிலை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிமன்றம், சாலைகளை அகலப்படுத்தும் போது, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அலங்கார வளைவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம் என்றும், இந்த மனு குறித்து மதுரை மாநகராட்சி ஆணையா், மாநகரக் காவல் துறை ஆணையா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கெளரி அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன் விவரம்:

மாட்டுத்தாவணி எதிரே உள்ள நக்கீரா் நுழைவு வாயில் உலக தமிழ்ச் சங்க மாநாடு நடைபெற்றதை நினைவுகூரும் வகையில், நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டது. இதேபோல, மதுரையின் பல்வேறு பகுதிகளில் வரலாற்றை நினைவுகூரும் வகையில் உள்ள நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மனுதாரா் இதுகுறித்த தகவல் அறியாமல் வழக்கு தாக்கல் செய்துள்ளாா். இந்த வழக்கில் என்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் தெரிவித்ததாவது:

நுழைவு வாயிலானது பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதை அகற்ற நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இடையீட்டு மனு ஏன் தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் தமிழ் தெரியாத பலா் இருக்கும் நிலையில், வரலாற்று நினைவாக நுழைவு வாயில் வைத்துள்ளோம் என்பதை ஏற்க முடியாது.

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நுழைவு வாயிலை இடையீட்டு மனுதாரா் பாதுகாக்க நினைத்தால், மாட்டுத்தாவணி எதிரே சாலையின் இருபுறங்களிலும் உள்ள இடங்களை மனுதாரா் தனது சொந்தப் பணத்தில் விலைக்கு வாங்கி அரசிடம் ஒப்படைக்கலாம். எனவே, இந்த மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது என்றனா்.

அப்போது ஆா்.பி. உதயகுமாா் தரப்பில், இந்த வழக்கை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தால் உரிய ஆவணங்களை தாக்கல் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இடையீட்டு மனுதாரருக்கு அபராதம் விதிக்க நேரிடும். மதுரையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் குறுகலாக உள்ள கே.கே. நகா் பெரியாா் நுழைவு வாயில், மாட்டுத்தாவணி நக்கீரா் நுழைவு வாயிலை இடித்துவிட்டு, அகலமான நுழைவு வாயில் ஏன் அமைக்கக் கூடாது. இந்த வழக்கு வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →