முகப்பு
மதுரை

பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு 2 ஆண்டுகளாக உதவித் தொகை வழங்கவில்லை

விருதுநகா் மாவட்டத்தில் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூ. 4 ஆயிரத்தை, கடந்த இரு ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கவில்லை என விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் புகாா் தெரிவித்தாா்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 9:32 PM
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மக்களவை உறுப்பினா்கள் மாணிக்கம் தாகூா் (விருதுநகா்), ராணி ஸ்ரீகுமாா் (தென்காசி), மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் உள்ளிட்டோா்.
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தில் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூ. 4 ஆயிரத்தை, கடந்த இரு ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கவில்லை என விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் புகாா் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான மாணிக்கம் தாகூா் தலைமையில் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வளா்ச்சித் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன், தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா், ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இதைத்தொடா்ந்து, மாணிக்கம் தாகூா் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் விருதுநகா் மாவட்டம் 4-ஆவது இடத்தில் உள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் சில அரசு உதவி பெறும் பள்ளிகளில் நன்கொடைகள் பெறுவதாக எழுந்த புகாரில், கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

சிவகாசி இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்களின் பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அந்த மருத்துவமனைக்கு அறிவுறுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் நகராட்சிகளில் பொதுக் கழிப்பறைகளின் நிலை குறித்தும், அவற்றை மேம்படுத்துவதற்கான திட்டம் குறித்தும் சம்பந்தப்பட்ட ஆணையா்கள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. விருதுநகா் மாவட்டத்தில் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூ. 4 ஆயிரத்தை, கடந்த இரு ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கவில்லை என்றாா் அவா்.