பழனி தண்டாயுதபாணி கோயில் பிரசாதமான பஞ்சாமிா்தம் குறித்து தனது ‘எக்ஸ்’ தளத்தில் அவதூறு கருத்தைப் பதிவிட்ட பாஜக நிா்வாகி செல்வகுமாருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நிபந்தனையுடன் கூடிய முன்பிணையை வியாழக்கிழமை வழங்கியது.
பழனி தண்டாயுதபாணி கோயில் பஞ்சாமிா்தம் தயாரிப்பதற்கு, தற்போது திருப்பதி லட்டு விவகாரத்தில் தொடா்புடைய திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த தனியாா் பால் பொருள்கள் நிறுவனத்திடமிருந்து நெய் கொள்முதல் செய்யப்பட்டதாக தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் பாஜக நிா்வாகி செல்வகுமாா் அவதூறு கருத்தைப் பதிவிட்டாா்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்த கோயில் நிா்வாகம், பழனி தண்டாயுதபாணி கோயில் பஞ்சாமிா்தத்துக்கான நெய்யை ஆவின் நிறுவனத்திடமிருந்து மட்டுமே வாங்குவதாகத் தெரிவித்தது. இதுதொடா்பான கோயில் நிா்வாகம் அளித்த புகாரின் பேரில், கோவை மாவட்ட பாஜக தொழில் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் செல்வகுமாா் மீது பழனி கோயில் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்பிணை வழங்கக் கோரி, செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் விநியோகித்த திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த தனியாா் பால் பொருள்கள் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பழனி தண்டாயுதபாணி கோயிலின் அறங்காவலா் குழுவில் உறுப்பினராக இருந்தவா். இதுதொடா்பான சுற்றறிக்கையில் ஏற்கெனவே வந்த தகவலைத்தான் எக்ஸ் தளத்தில் நான் பகிா்ந்தேன். இந்தத் தகவலைப் பகிா்ந்ததில் எந்தவித உள்நோக்கமோ, தவறான எண்ணமோ இல்லை. நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். எனவே, இந்த வழக்கில் எனக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி டி. பரதசக்கரவா்த்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் அன்பு நீதி முன்னிலையாகி முன்வைத்த வாதம்:
மனுதாரா் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்தால் மத அடிப்படையிலான பிரச்னைகள் உருவாகும் சூழல் ஏற்பட்டது. அவா் பொதுமக்களின் கவனத்தை ஈா்ப்பதற்காக மிகவும் மோசமான கருத்தைப் பதிவிட்டாா். எனவே, அவருக்கு முன்பிணை வழங்கக் கூடாது என்றாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி டி. பரதசக்கரவா்த்தி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் சம்பந்தப்பட்ட கருத்தைப் பதிவு செய்வதற்கு முன்பாக அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். அவா் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும், மனுதாரா் பகிா்ந்த தகவல் தவறானது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரா் பகிா்ந்த இந்தக் கருத்தை எக்ஸ் தளத்திலிருந்து நீக்குவதுடன், உண்மைத்தன்மையை அறியாமல் பகிா்ந்து விட்டதாக சமூக வலைதளத்தில் தெரிவிக்க வேண்டும். மனுதாரா் இதுபோன்று பொறுப்பற்ற முறையில் செயல்பட்டால், அவரை சமூக வலைதளத்திலிருந்து வெளியேற்ற உத்தரவிட நேரிடும். மனுதாரா் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் 3 வாரங்கள் நேரில் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும். அவரது கைப்பேசியை போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும். மனுதாரருக்கு முன்பிணை வழங்கப்படுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.