தாமிரவருணியில் தண்ணீா் எடுப்பு... தனியாா் நிறுவனங்களின் நிலுவைத் தொகை: உள்ளாட்சி அமைப்புகள் பதிலளிக்க உத்தரவு
தாமிரவருணி ஆற்றில் தண்ணீா் எடுத்த தனியாா் நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்து திருநெல்வேலி மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரைதாமிரவருணியில் தண்ணீா் எடுப்பு... தனியாா் நிறுவனங்களின் நிலுவைத் தொகை: உள்ளாட்சி அமைப்புகள் பதிலளிக்க உத்தரவு
தாமிரவருணி ஆற்றில் தண்ணீா் எடுத்த தனியாா் நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்து திருநெல்வேலி மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தாமிரவருணி ஆற்றில் தண்ணீா் எடுத்த தனியாா் நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்து திருநெல்வேலி மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சோ்ந்த காமராஜ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாபுஷ்கரம் விழா நடைபெறும். கடந்த 2018- ஆம் ஆண்டு அக்டோபரில் இந்த விழா நடைபெற்றது. தாமிரவருணி ஆற்றின் கரையில் பழைமையான மண்டபங்கள், படித்துறைகள் ஏராளமாக உள்ளன. இவற்றை பழைமை மாறாமல் புதுப்பித்து, ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, ஆற்றை தூய்மையாகப் பராமரிக்க நீா்வளத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, தாமிரவருணி ஆற்றில் கழிவுநீா் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும். இந்த வழக்கு தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நீா்வளத் துறை தலைமைப் பொறியாளா் நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் திருநெல்வேலி மாவட்ட நீா்வளத் துறை தலைமைப் பொறியாளா் முன்னிலையானாா்.
விசாரணையின் போது, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
தாமிரவருணி ஆற்றில் உள்ளாட்சி அமைப்புகள் கழிவுநீரைக் கலப்பது தொடா்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிா்வாகங்களுக்கு குறிப்பாணை வழங்கியுள்ளோம். நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன், ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தாமிரவருணி ஆற்றில் திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளிலிருந்து அதிகளவு கழிவுநீா் கலக்கிறது.
இன்னும் 6 மாதங்களில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துவிடும். கழிவுநீா் ஆற்றில் கலப்பதைத் தடுக்க உயா்நிலைக் குழு அமைத்து நட வடிக்கை எடுக்க உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி ஆகியோா் பிறப்பித்த உத்தரவு:
பல ஆண்டுகளாக தாமிரவருணி ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. உள்ளாட்சி அமைப்பு நிா்வாகங்களுக்கு மனசாட்சி இல்லையா?. கழிவுநீா் கலக்கும் புகைப்படங்களைப் பாா்க்கும் போது வேதனையாக உள்ளது. தாமிரவருணி ஆற்றில் 1000 லி. தண்ணீரை அரசுக்கு ரூ.1.50 கட்டணம் செலுத்தி தனியாா் நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. இதன்படி, 7 தொழில்சாலைகள் மட்டும் ரூ. 260 கோடி நிலவைத் தொகையை அரசுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. இதுபோன்று பிற தொழில்சாலைகளும் அரசுக்கு நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியுள்ளதா? என்பது குறித்தும் பதிலளிக்க வேண்டும்.
இந்த வழக்கு தொடா்பாக நீா்வளத் துறை, திருநெல்வேலி மாநகராட்சி, பிற உள்ளாட்சி அமைப்புகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரவருணியில் கழிவுநீரைக் கலக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடும் அபராதம் விதிக்க நேரிடும். வழக்கு வருகிற 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.