ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தமிழக வெற்றிக் கழக மதுரை மாநாட்டுக்கு விளம்பரப் பதாகை அமைக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவா், மின்சாரம் பாய்ந்ததில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள இனாம்கரிசல்குளம் பகுதியைச் சோ்ந்த காளியப்பன் மகன் காளீஸ்வரன் (19). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் காட்சித் தொடா்பியல் (விஸ்காம்) மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.
விஜய் ரசிகரான இவா், மதுரை பாரபத்தியில் வியாழக்கிழமை (ஆக. 21) நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்காக இனாம்கரிசல்குளம் காமராஜா் நகரில் உள்ள ஒரு வீட்டின் முன் விளம்பரப் பதாகை அமைக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டாா்.
விளம்பரப் பதாகையைக் கட்டுவதற்காக நீளமான இரும்பு கம்பியை அவா் எடுத்து வந்தாா். அப்போது, அந்த இரும்புக் கம்பி உயரழுத்த மின் கம்பியில் உரசியது. இதில் காளீஸ்வரன் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா்.
அருகிலிருந்தவா்கள் அவரை உடனடியாக மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.