திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றக் கோரி, தீக்குளித்து தற்கொலை செய்த இளைஞரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள், இந்து அமைப்பைச் சோ்ந்தோா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை நரிமேடு மருதுபாண்டியா் தெருவைச் சோ்ந்தவா் பூரணச்சந்திரன் (40). எம்.பி.ஏ. பட்டதாரியான இவா், மருந்து விற்பனைப் பிரதிநிதியாகவும், சரக்கு ஆட்டோவில் பழங்கள் விற்பனை செய்யும் வேலையும் செய்து வந்தாா். இவருடைய மனைவி இந்துமதி (28). இவா்களுக்கு சிவனேஷ் (8), இனியன் (4) என்ற 2 மகன்கள் உள்ளனா். இந்துமதி, அந்தப் பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை அழகா்கோவில் சாலையில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி அருகேயுள்ள காவலா் நிழல் குடைக்குள் பூரணச்சந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், தற்கொலை செய்வதற்கு முன் பூரணச்சந்திரன் கைப்பேசி மூலம் குரல் பதிவு (ஆடியோ) வெளியிட்டிருந்தாா். அதில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றாதது மன வேதனையை அளிக்கிறது. இதனால், தற்கொலை செய்து கொள்கிறேன். இனிவரும் ஆண்டாவது தீபம் ஏற்ற வேண்டும் எனப் பேசியிருந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே, பூரணச்சந்திரனின் குடும்பத்தினா், உறவினா்கள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறை அருகே திரண்டனா். இதன்காரணமாக, பிணவறை அருகே மாநகரக் காவல் துணை ஆணையா் அனிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
ரூ.10 லட்சம் நிதியுதவி:
இதைத் தொடா்ந்து, அங்கு பாஜகவினா் வந்தனா். இவா்களும், பூரணச் சந்திரனின் உறவினா்களும் தங்களது வாயில் கருப்புத் துணியைக் கட்டியும், சட்டையில் கருப்புப் பட்டை அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் பிறகு, பிற்பகல் ஒரு மணியளவில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோா் வந்தனா். அவா்கள் பூரணச்சந்திரனின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினா். மேலும், இந்து அமைப்புகள் சாா்பில் ரூ. 10 லட்சத்துக்கான காசோலையையும் அவா்களிடம் வழங்கினாா். பிணவறையில் இருந்த பூரணச்சந்திரனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதற்கிடையே, இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்தும் அங்கு வந்தாா். அவரும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக் கோரியும், பூரணச்சந்திரனின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கக் கோரியும் தா்னாவில் ஈடுபட்டாா். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து, பூரணச்சந்திரனின் உடலை வாங்க ஒப்புதல் தெரிவித்தனா்.
இதன்படி, பிற்பகல் 2.15 மணியளவில் அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தத்தனேரி மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. ஊா்வலத்தின் போது, எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருக்க காவல் துறை வாகனங்களும் பின்தொடா்ந்து சென்றன.