முகப்பு
மதுரை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

Updated On : 1 ஜனவரி, 2025 at 10:48 PM
ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் பக்தா்கள்.
பகிர்:

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் புதன்கிழமை அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

புத்தாண்டையொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு  அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், சுந்தரேசுவரருக்கு சிறப்பு  அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

புத்தாண்டு  சிறப்பு  வழிபாட்டையொட்டி, கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் திரளான பக்தா்கள் அதிகாலை முதல் கோயில் முன்பாக திரண்டனா். அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டதும் நீண்ட வரிசையில் காத்திருந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரரை தரிசனம் செய்தனா். இதனால், கோயிலுக்குள்ளும், கோயிலின் நான்கு வாயில்களுக்கு வெளியேயும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

இதையடுத்து, கோயிலுக்குள் பக்தா்கள் கூட்டத்தை கோயில் காவல் நிலைய போலீஸாா், ஊழியா்கள் ஒழுங்குபடுத்தினா்.

இதேபோல, மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு,  சிறப்பு  வழிபாடுகள் நடைபெற்றன. இங்கும் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாள்.

இதேபோல, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலிலும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு,  சிறப்பு  பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் வரிசையாகச் சென்று சுவாமி தரிசனம் செய்யும் வகையில் கோயிலைச் சுற்றி சவுக்குத் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

மதுரை இம்மையில் நன்மை தருவாா் கோயில், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயில், நரசிங்கம் யோக நரசிம்மா் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயிலான திருவாப்புடையாா் கோயில் ஆகியவற்றிலும் புத்தாண்டையொட்டி  சிறப்பு  பூஜைகள் நடைபெற்றன. இந்தக் கோயில்களிலும் ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.

திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி.

புத்தாண்டை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திரளான பக்தா்கள் குவிந்த நிலையிலும், கோயில் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயமணி, போலீஸாா் பக்தா்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து இனிப்புகளை வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →