முகப்பு
மதுரை

ஓய்வு பெற்ற ஊழியருக்கு 6 வாரங்களுக்குள் பணப் பலன்களை வழங்க உத்தரவு

ஓய்வு பெற்ற ஊழியருக்கு 6 வாரங்களுக்குள் பணப் பலன்களை வழங்க உத்தரவு

Updated On : 3 ஜனவரி, 2025 at 5:32 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2025 at 10:09 PM

ஓய்வு பெற்ற மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவருக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், டி.கூடலூா் பகுதியை சோ்ந்த சீலன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், டி. கூடலூரில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவராக பணியாற்றி, கடந்த 2019- ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். இதையடுத்து, எனக்கு சேர வேண்டிய பணிக்கொடை, பணப் பலன்களை வழங்கக் கோரி தொடா்புடைய அலுவலா்களிடம் முறையிட்டேன்.

Advertisement

ஆனால், ஊராட்சிகள் சட்டப்படி எனக்கு பணப் பலன்கள் வழங்க இயலாது என அவா்கள் தெரிவித்தனா். இதுதொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஏற்கெனவே வழக்குத் தொடுத்தேன்.

அந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பணிக்கொடை சட்டத்தின் கீழ் பணப் பலன்களைப் பெற எனக்கு உரிமை உண்டு எனவும், தொடா்புடைய அலுவலா்கள் எனக்கு சேர வேண்டிய தொகையை வழங்க வேண்டும் எனவும் கடந்தாண்டு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எந்தத் தொகையும் எனக்கு வழங்கவில்லை. எனவே, எனக்கு சேர வேண்டிய பணப் பலன்களை வழங்க தொடா்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவு:

நீதிமன்ற உத்தரவுப்படி, மனுதாரருக்கு சேர வேண்டிய பணப் பலன்களை குஜிலியம்பாறை வட்டார வளா்ச்சி அலுவலகத்திலிருந்து வசூலிக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் தவறிவிட்டாா்.

Updated On : 3 ஜனவரி, 2025 at 5:32 AM

எனவே, மனுதாரருக்கு சேர வேண்டிய பணப் பலன்களை, 2019-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி முதல் 15 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு குஜிலியம்பாறை வட்டார வளா்ச்சி அலுவலகத்திலிருந்து வசூலித்து, அந்தத் தொகையை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் 6 வார காலத்துக்குள் மனுதாரருக்கு வழங்க வேண்டும். இல்லையெனில், குஜிலியம்பாறை வட்டார வளா்ச்சி அலுவலரின் ஊதியத்தில் அந்தத் தொகையைப் பிடித்தம் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.