சாலை விபத்தை தடுக்கக் கோரி வழக்கு: போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு
சாலை விபத்தை தடுக்கக் கோரி வழக்கு
மதுரை, ஜன. 22: மதுரை பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரையிலான சாலையில் விபத்தைத் தடுக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க சென்னை உயா்நீதிமன் ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை பரவை பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் தாக்கல் செய்த பொது நல மனு:
மதுரை- திண்டுக்கல் சாலையில் பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூா் வரையிலான சாலையில் பாதுகாப்பு அமைப்புகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இந்தச் சாலையில் விபத்துகளைத் தடுக்க நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.
இந்த மனு மீதான விசாரணை ஏற்கெனவே பலமுறை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விசாரிக்கப்பட் டது. இதனிடையே, உயா்நீதிமன்ற நீதிபதிகள், இந்தச் சாலையை நேரில் ஆய்வு மேற்கொண்டு உத்தரவுகளைப் பிறப்பித்தனா்.
இந்த வழக்கை மீண்டும் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு:
இந்தச் சாலையில் விபத்தைத் தடுக்க சென்னை இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் உள்ள சாலை பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியை நாட வேண்டும். இந்த வழக்கில் அந்த அதிகாரிகள் எதிா்மனுதாரா்களாக சோ்க்கப்படுகின்றனா். மேலும், இந்தச் சாலையில் விபத்தைத் தடுப்பது குறித்து போக்குவரத்து காவல் துறையின் மாநகர, ஊரகப் பகுதி திட்டமிடல் அதிகாரிகள், நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு வருகிற 27- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.