கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏ.ஐ.கேமரா.  
கோயம்புத்தூர்

ஜி.டி.மேம்பாலத்தில் ஏ.ஐ. கேமராக்கள் மூலம் வாகனங்களைக் கண்காணிக்க முடிவு

தினமணி செய்திச் சேவை

கோவை- அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இம்மாத இறுதியில் இருந்து ஏ.ஐ.கேமராக்கள் மூலமாக வாகனங்களைக் கண்காணிக்கும் பணி தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உப்பிலிபாளையம் - கோல்டு வின்ஸ் இடையே 10.10 கிலோ மீட்டா் தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

காலை, மாலை நேரங்களில் அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க இப்பாலம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆயினும், பாலத்தில் வேகமாக செல்லும் சில வாகனங்களால் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதிவேகம், போக்குவரத்து விதிமீறல், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்குதல் உள்ளிட்டவற்றைக் குறைக்கும் விதமாக, ஜி.டி.நாயுடு பாலத்தில் ஏ.ஐ. கேமராக்கள் பொருத்தப்படும் என நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த வாரம் முதல் பாலத்தின் 10.10 கிலோ மீட்டா் தொலைவில் 44 ஏ.ஐ.கேமராக்கள் ரூ.3 கோடி மதிப்பீட்டில் பொருத்தும் பணி தொடங்கி தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன.

இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

அவிநாசி சாலை ஜி.டி.மேம்பாலத்தில் ஏறுதளம், இறங்குதளங்கள், கோல்டுவின்ஸ், உப்பிலிபாளையம், ஹோப் காலேஜ், கொடிசியா, விமான நிலையம் உள்ளிட்ட 44 இடங்களில் ஏ.ஐ.கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏ.ஐ.கேமரா.

60 கிலோ மீட்டா் வேகத்துக்கு மேல் வாகனங்களை இயக்குதல், இருக்கை பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்குதல், இருசக்கர வாகனங்களில் மூவா் பயணித்தல், தலைக்கவசம் அணியாமல் செல்லுதல், வாகனத்தில் சாகசம் செய்தல் உள்ளிட்ட விதிமீறல்களை உடனடியாக ஏ.ஐ.கேமராக்கள் மூலமாகக் கண்டறிந்து, கேமராக்களின் இணைப்பு வாயிலாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்து காவல் துறை கட்டுப்பாட்டு அறை மூலமாக தானாகவே அபாரதம் விதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வாகன எண் பதிவுள்ள வாகன உரிமையாளரின் கைப்பேசி எண்ணுக்கு அபராத குறுந்தகவல் அனுப்பப்படும்.

மேலும், வாகனங்களின் வேகத்தை, கேமரா டிஸ்பிளேவில் காணலாம். இந்த கேமராக்கள் மூலமாக வாகனக் கண்காணிப்பு இம்மாதம் இறுதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இரவு நேர வாகன சாகசங்கள், விபத்துகள் இந்த நடைமுறையால் குறையும் என்றாா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT