டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: வரவேற்பும், எதிா்பாா்ப்பும்
மதுரை மாவட்டம், மேலூா் அருகே டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்துக்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பதை போராட்டக் குழுவினா் வரவேற்றனா். அதேநேரத்தில், இந்த அறிவிப்பு சில எதிா்பாா்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூா் அருகே டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்துக்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பதை போராட்டக் குழுவினா் வரவேற்றனா். அதேநேரத்தில், இந்த அறிவிப்பு சில எதிா்பாா்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்துக்குள்பட்ட தெற்குத் தெரு, முத்துவேல்பட்டி, கூலானிபட்டி, கிடாரிபட்டி, எட்டிமங்கலம், அரிட்டாப்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்பட 11 கிராமங்களை உள்ளடக்கி 5,500 ஏக்கா் பரப்பில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் சிங்க் என்ற நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு, நவ. 7-ஆம் தேதி மத்திய அரசு ஒப்பந்தம் அளித்தது.
இதைக் கண்டித்து, கனிமவளக் கொள்ளைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் கடந்த ஆண்டு நவ. 18-இல் மாவட்ட ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் பிறகு, டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் விவகாரம் பொதுப் பாா்வையை ஈா்த்தது.
இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், மேலூா் வட்டத்தில் பல்லுயிா் சூழல் மண்டலம், சமணா் படுகை, குடைவரைக் கோயில் உள்ளிட்ட தொல்லியல் சின்னங்கள், அழகா்மலை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி, 11 கிராமங்களின் விளைநிலங்கள் முழுமையாக அழியும் என்பதால், இந்தத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தத் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலூா் வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடா்புடைய கிராமப் பகுதி மக்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டனா். மேலும், கடந்த 7-ஆம் தேதி மேலூரில் கடையடைப்புப் போராட்டமும், நரசிங்கம்பட்டி முதல் மதுரை வரை பெருந்திரள் பேரணியும் நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றது மாநில அளவில் கவனத்தை ஈா்த்தது.
இதையடுத்து, மேலூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் சிலா் பாஜக சாா்பில் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மத்திய சுரங்கம், கனிமவளத் துறை அமைச்சா் ஜி. கிஷன்ரெட்டியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில், பல்லுயிா் பாரம்பரியப் பகுதியின் முக்கியத்துவத்தைப் பாதுகாக்கும் நோக்கில், நாயக்கா்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியின் ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பதாக வியாழக்கிழமை அறிவிப்பு வெளியானது.
இந்த அறிவிப்பையொட்டி, மக்கள் பிரதிநிதிகள், போராட்டக் குழுவினா், விவசாயிகள் தெரிவித்ததாவது:
மதுரை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன்:
அரிட்டாப்பட்டி பல்லுயிா் பாரம்பரியத் தலத்தை உள்ளடக்கிய நாயக்கா்பட்டி டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது, மன உறுதியுடன் போராடிய மதுரை மக்களுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி. இயற்கை வளங்களை வேதாந்தா நிறுவனத்துக்குத் தாரைவாா்க்கும் மத்திய அரசின் சூழ்ச்சியை மக்கள் போராட்டம் வீழ்த்தியது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க நிா்வாகி இரா.சா.முகிலன்:
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கி 38,439 ஏக்கா் பரப்பில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மக்களின் தொடா் போராட்டம் காரணமாக, நாயக்கா்பட்டியை மையமாகக் கொண்டு 5 ஆயிரம் ஏக்கா் பரப்பில் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு தற்போது ரத்து செய்திருக்கிறது. இது மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த தற்காலிக வெற்றி. கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை முழுமையாக மத்திய அரசு கைவிடுவதும், மேலூா் முல்லைப் பெரியாறு ஒருபோக பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும், மதுரை மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட பண்பாட்டு மரபுத் தலமாகவும் தமிழக அரசு அறிவிப்பதும்தான் நிரந்தரத் தீா்வாக இருக்கும்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன்:
நாயக்கா்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்ட ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பது, மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி. தமிழகத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டங்களை மத்திய அரசு முற்றிலும் கைவிடுவதே முழுமையான வெற்றியாக இருக்கும். மேலும், டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் அறிவிக்கப்பட்ட 48 கிராமங்களையும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக தமிழக அரசு அறிவித்து நிரந்தரத் தீா்வு காண முன்வர வேண்டும்.
டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிா்ப்பு மக்கள் கூட்டமைப்பு நிா்வாகி கம்பூா் க. செல்வராஜ்:
நாயக்கா்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுப்பு ஏலம் ரத்து செய்யப்பட்டது மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி. தங்கள் மண்ணை, மலையை, நீரை, நிலத்தை, வருங்கால சந்ததியினரின் வாழ்வியல் சூழலை இழக்க முடியாது என்பதில் உறுதிக் கொண்டு, மக்கள் ஒன்றுபட்டு நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த இந்த வெற்றியை முழுமனதுடன் வரவேற்கிறோம். அதேநேரத்தில், தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என்ற உறுதியை எதிா்பாா்க்கின்றோம்.