அப்பாவு கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

100 நாள் வேலை திட்டத்தில் சதி: பேரவைத் தலைவர் அப்பாவு விமர்சனம்

வரும் தேர்தலிலும் மக்கள் முதல்வர் சுட்டிக்காட்டும் வேட்பாளர்களுக்கே ஆதரவளிப்பார்கள் என்று பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தது த குறித்து...

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், வரும் தேர்தலிலும் மக்கள் முதல்வர் சுட்டிக்காட்டும் வேட்பாளர்களுக்கே ஆதரவளிப்பார்கள் என்று பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்நிலை மற்றும் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் வசித்து வந்த 876 குடும்பங்களுக்கு, சுமார் ரூ.129 கோடி மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 400 சதுர அடி பரப்பளவில், தலா ரூ.18 லட்சம் மதிப்பிலான இந்த வீடுகளைச் சென்னையில் இருந்து முதல்வர் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேரவைத் தலைவர் மு. அப்பாவு, மத்திய அரசின் நிதிப் பகிர்வு மற்றும் கடன் விவகாரங்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

ஆசிய வங்கி நிதியுதவியுடன் சாதனை

இது குறித்துப் பேசிய அப்பாவு, அரசிடம் போதிய நிதி இல்லாத சூழலிலும், ஏழை மக்களின் நலன் கருதி ஆசிய வங்கியிடம் ரூ. 129 கோடி கடன் பெற்று இந்தத் திட்டத்தை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். இந்த வீடுகளைப் பெற்ற மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்றார்.

திமுக அரசு வாங்கிய கடன் ரூ.4 லட்சம் கோடி

தமிழக அரசின் கடன் அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு:

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றபோது ரூ.5.18 லட்சம் கோடி கடன் இருந்தது. அதற்கு வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு ரூ.60,000 கோடி செலுத்தப்படுகிறது. தற்போது சுமார் ரூ.9 லட்சம் கோடி கடன் உள்ளது. அதில் 4 லட்சம் கோடி மட்டுமே திமுக அரசு வாங்கியது. அந்தப் பணத்தை ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதற்கும், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களுக்குமே அரசு பயன்படுத்துகிறது.

மோடி அரசின் கடன் ரூ.155 லட்சம் கோடி

2014-இல் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்கும்போது நாட்டின் கடன் ரூ. 55 லட்சம் கோடியாக இருந்தது. இன்று அது ரூ.155 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த ரூ.100 லட்சம் கோடி கடனை வாங்கி யாருக்குக் கொடுத்தார்கள்? கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.16 லட்சம் கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.

ஏழை மக்களுக்கு எதிரான வஞ்சனை

100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்திய மத்திய அரசின் அறிவிப்பு குறித்துப் பேசியவர், "இது ஒரு சதித் திட்டம். 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.10,000 கோடி தேவைப்படுகிறது. ஆனால், 125 நாட்களாக உயர்த்திய பிறகு மத்திய அரசு ஒதுக்கப்போகும் நிதி வெறும் ரூ.6,000 கோடி மட்டுமே. பாதி நிதியைக் குறைத்துவிட்டு எப்படி வேலை வழங்க முடியும்? இது ஏழை மக்களுக்கு எதிரான வஞ்சனை" என்று சாடினார்.

மேலும், மருத்துவக் கல்லூரி போன்ற திட்டங்களுக்கு மாநில அரசு 60% நிதி வழங்கினாலும், அதற்குப் பிரதமர் மோடியின் பெயரை வைக்கச் சொல்லி மத்திய அரசு வற்புறுத்துவதாகவும், தமிழகத்தின் ஜிஎஸ்டி வரியில் உரியப் பங்கினை (50%) வழங்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

திமுக அரசின் சாதனைகள் பட்டியல்

  • 1.31 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 கலைஞர் உரிமைத் தொகை.

  • மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.3,760 கோடி.

  • மக்களைத் தேடி மருத்துவம் மூலம் 2.58 கோடி பேர் பயன்.

  • புதுமைப் பெண் திட்டம் மூலம் உயர்கல்வி படிக்கும் 12 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1.000

  • 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

வரி கட்டாமல் ஏமாற்றியவர்

நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது குறித்த கேள்விக்கு, "வரி கட்டாமல் ஏமாற்றியவர்கள் குறித்து மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆட்சிக்கு வராமலே இப்படி இருந்தால், வந்தால் என்ன செய்வார்கள் என மக்கள் பார்க்கிறார்கள்" என்று சூசகமாகப் பதிலளித்தார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி

புதுச்சேரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி.யின் எக்ஸ் பதிவு குறித்த கேள்விக்கு, "திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. கருத்துகள் வேறுபட்டாலும் கூட்டணி தொடரும்" என்று உறுதிபடத் தெரிவித்தார்.

முதல்வர் சுட்டிக்காட்டும் வேட்பாளர்களுக்கே மக்கள் ஆதரவு

"தமிழக அரசு சாமானிய மக்களின் முன்னேற்றத்திற்காகச் சிந்தித்துத் திட்டங்களைத் தீட்டும் அரசாக உள்ளது. வரும் தேர்தலிலும் மக்கள் முதல்வர் சுட்டிக்காட்டும் வேட்பாளர்களுக்கே ஆதரவளிப்பார்கள்" என்று அப்பாவு கூறினார்.

Conspiracy in the 100-day employment scheme: Assembly Speaker Appavu criticizes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் உளவுத்துறை நடவடிக்கை: 24 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

படத் தலைப்பில் சாதிய ரீதியான சர்ச்சை..! டீசரை நீக்கி விளக்கமளித்த பாலிவுட் இயக்குநர்!

ஜோசப் விஜய் பெயரில் தவெகவின் முதல் விருப்ப மனு!

வரம் தரும் வாரம்!

மேகாலயா சுரங்க வெடிவிபத்து! 18 பேர் பலி!

SCROLL FOR NEXT