FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

வேளாண் கடன் தள்ளுபடி அவசியமே...

தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட பல பெருங்கோயில்களும், கல்லணை போன்ற கட்டுமானங்களும் பிற வளர்ச்சியும் வேளாண் பொருளாதாரத்தைக் கொண்டே வளர்ந்துள்ளன.

Updated On : 11 ஜூலை 2026, 6:39 am IST
வேளாண்மை - கோப்புப்படம்
பகிர்:

தமிழக பண்பாட்டு வரலாற்றின் அடிப்படை வேளாண் நாகரிகமாகும். தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட பல பெருங்கோயில்களும், கல்லணை போன்ற கட்டுமானங்களும் பிற வளர்ச்சியும் வேளாண் பொருளாதாரத்தைக் கொண்டே வளர்ந்துள்ளன.

பிரிட்டிஷ் ஆட்சி தனது ஏற்றுமதிக்கான வகையிலான விவசாயத்தைக் கட்டாயப்படுத்தியதாலும் கட்டுப்பாடின்றி வரிகள் விதித்ததாலும் இந்திய வேளாண்மை முற்றாக சீர்குலைந்தது. சுதந்திரம் அடைந்த போது, உணவுப் பயிர் விளைச்சல் குறைந்திருந்தது. அமெரிக்க கோதுமை இறக்குமதியானது. பின்னர், 1965-இல் பசுமைப் புரட்சி திணிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை பயிர் வளர்க்கத் தேவையான அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருந்த உழவர்கள், எல்லாவற்றையும் வெளியில் வாங்கிப் பயன்படுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்; அதன் விளைவாக அனைத்து உழவர்களும் நிரந்தரக் கடனாளிகளாக மாறிவிட்டனர்.

அதிகம் விளைவிக்கச் சொல்லும் அரசுகள் விவசாயிகள் வருமானத்தைப் பாதுகாப்பதற்காக எந்தவித முயற்சியையும் செய்வதில்லை. தமிழகத்தில் சுமார் 80 லட்சம் விவசாயக் குடும்பங்கள் உள்ளன. இவர்களில் 75 முதல் 80 % இரண்டு ஏக்கர் அளவில் நிலம் உள்ள சிறு உழவர்கள், 18 முதல் 20% 5 ஏக்கர் அளவில் நிலம் கொண்டுள்ள குறு விவசாயிகள். 2% அளவில்தான் 10 ஏக்கருக்கும் அதிக நிலம் கொண்டவர்கள்; இந்த 80 லட்சம் குடும்பங்களில் 80% குடும்பத்தினர் கடனாளிகளாகவே உள்ளனர்.

Advertisement

Advertisement

காவிரிப் படுகையில் நடத்திய கணக்கெடுப்பு, குறு விவசாயியின் கடன் ரூ.4.33 லட்சம், சிறு விவசாயியின் கடன் ரூ.3.63 லட்சம், நடுத்தர மற்றும் பெரிய விவசாயியின் கடன் ரூ.6.72 லட்சமாகவும் அதற்கு மேலாகவும் உள்ளது. 77.4% சிறு விவசாயிகள் குடும்பங்களும், 78.3% குறுவிவசாயிகள் குடும்பங்களும், 86.1% நடுத்தர விவசாயிகள் குடும்பங்களும், 90.9% பெரிய விவசாயிகள் குடும்பங்களும் கடனில் தத்தளிக்கிறது.

இந்திய அரசின் புள்ளிவிவரமொன்று தமிழக விவசாயியின் சராசரி கடன் அளவு ரூ. 1.3 லட்சத்திலிருந்து ரூ.1.6 லட்சமாக உள்ளது என்கிறது. 74.5% வேளாண் குடும்பங்கள் கடனில் உள்ளன. தமிழகம் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. (ஆந்திரம் முதலிடம்; 93.2% விவசாயக் குடும்பங்கள் கடனில் உள்ளன.)

விவசாயக் குடும்பத்தின் சராசரி கடன் ரூ.1,06,546. இந்தக் குடும்பங்களின் ஆண்டு வருமானம் ரூ.1.25 லட்சம். அதாவது ஒட்டுமொத்த வருவாயும் கடனுக்கே செல்கிறது. இந்த நிலையை உணர்ந்ததால்தான், 1990 முதல் அவ்வப்போது அரசுகள் தற்காலிக நிவாரணமாக கடன் தள்ளுபடி செய்தன.

1990-இல் அப்போதைய மத்திய அரசு ஒவ்வொரு விவசாயிக்கும் விவசாய மற்றும் கிராமக் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் ரூ.10,000 வீதம் கடன் நிவாரணம் வழங்கியது; இதற்காக அரசு ரூ. 10,000 கோடி செலவிட்டது.

2006-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி அரசு எல்லா பிரிவு விவசாயிகளின் ரூ.7,000 கோடி கூட்டுறவு வேளாண் கடனைத் தள்ளுபடி செய்தது.

2008-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு வேளாண் கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரணத் திட்டத்தின் மூலம் 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுக் கடனையும், அதற்கும் அதிகமாக நிலம் உள்ளவர்களின் கடனில் 25% கடனையும் தள்ளுபடி செய்தது. ரூ. 71,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் 3.73 கோடி விவசாயிகள் கடன் சுமையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

2016-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் கொண்டிருந்த விவசாயிகளின் குறுகிய, மத்திய மற்றும் நீண்ட காலக் கடன்களான ரூ. 5,320 கோடியைத் தள்ளுபடி செய்தது.

2021-ஆம் ஆண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ரூ. 12,110 கோடி அளவில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் குறுகியகால பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்தது.

தற்போது முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு ரூ. 5,932 கோடி அளவில் இரு வகைகளில் கடன் தள்ளுபடி செய்துள்ளது. அனைத்து விவசாயிகளின் கடனும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மாட்டுப் பாலுக்கு ரூ.63.25-ம், எருமைப் பாலுக்கு ரூ.70-ம் உற்பத்தி செலவாகிறது. இந்த விலையிலிருந்து ரூ. 50 சேர்த்து விவசாயியிடம் வாங்கும் பாலின் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

தீவனத்தின் விலை 2007-2026-ஆம் ஆண்டு காலத்தில் 220% முதல் 230% வரை அதிகரித்துள்ளது. ஆனால், மாட்டுப் பாலின் கொள்முதல் விலை 140% முதல் 150%, எருமைப் பாலின் விலை 135% முதல் 145%-ஆக மட்டுமே உயர்ந்துள்ளது.

அரசின் தவறான கொள்முதல் விலை நிர்ணயம், சந்தையின் விலை நிர்ணயத்தால் ஒவ்வோர் ஆண்டும் இந்திய குறு விவசாயி ரூ. 30,000 முதல் ரூ. 1,00,000 வரையும், சிறு விவசாயி ரூ. 10,000 முதல் ரூ. 40,000 வரையும், பெரு விவசாயி ரூ. ஒரு லட்சம் முதல் பல லட்சங்களும் இழக்கிறார். சராசரியாக ஒரு விவசாயி குடும்பம் ரூ. 30,000 இழக்கிறது எனில், ஆண்டுதோறும் இந்திய விவசாயிகள் இழப்பது ரூ. 2.7 லட்சம் கோடிகளாகும்.

இந்திய விவசாயிகளுக்கு எந்தவிதச் சலுகைகளும் தரக்கூடாது என்று கூறும் அமெரிக்கா 'பண்ணை சட்டத்தின்' மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துகிறது. பயிர் காப்பீடு, ஆதரவு விலை, பேரிடர் நிவாரணம் மற்றும் நேரடி அரசு உதவிகள் மூலம் விவசாயிகளின் வருமானம் பாதுகாக்கப்படுகிறது. வேளாண் இடர் நீக்க உதவித் திட்டம் என விவசாயம் பாதிக்கப்படும்போது அமெரிக்க அரசு பல்லாயிரம் கோடி டாலர் மதிப்பிலான உதவித் தொகைகளை வழங்குகிறது.

உலகச் சந்தையில் விலை வீழ்ச்சி, அதிக உற்பத்தியால் விலை வீழ்ச்சி போன்ற நிலைகளில் வேளாண் சந்தையை நிலைப்படுத்துவதற்காகவும் விவசாயிகளை நிதி நெருக்கடியிலிருந்து மீட்கவும், உதவவும் விவசாயப் பண்ணைகள் திவாலாகாமல் தடுக்கவும் அமெரிக்க அதிபர் டிரம்ப், 2025-ஆம் ஆண்டு இறுதியில் சோயா,

மக்காச்சோளம் போன்றவை விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகளுக்கு உடனடி இடைக்கால உதவியாக 1,200 கோடி டாலர்களை வழங்கினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பொதுவான வேளாண் கொள்கை மூலம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான விவசாயிகள் நேரடி மானியங்களைப் பெறுகின்றனர். சில மதிப்பீடுகளின்படி பொதுவான வேளாண் கொள்கை நிதியின் 60 சதவீதத்துக்கும் அதிகமான தொகை நேரடியாக விவசாய வருமான ஆதரவுக்காக செலவிடப்படுகிறது. ஐரோப்பிய வேளாண் உத்தரவாதத் திட்டம் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் நிலத்தின் அளவுக்கு ஏற்ப வருவாய் உறுதியளிப்புக்காக உதவித் தொகை அளிக்கிறது.

வளர்ந்த நாடுகள் விவசாயிகளிடம் 'கடனை திருப்பிச் செலுத்துங்கள்' என்று மட்டும் கூறுவதில்லை; மாறாக, விவசாயிகளுக்கு நேரடி வருமான உதவி, விரிவானப் பயிர் காப்பீடுகள், விலை வீழ்ச்சியடையும்போது ஆதரவு விலை, பேரிடர் இழப்பீடு, வட்டி மானியம், முதலீட்டு மானியம் போன்ற பல பாதுகாப்பு முறைகளை வளர்ந்த நாடுகள் உருவாக்கியுள்ளன.

தமிழக விவசாயிகளின் முழுமையான கடன் தள்ளுபடியின் மதிப்பீடு அநேகமாக ரூ. 80,000 கோடி முதல் ரூ. 1,00,000 கோடி வரை இருக்கும். இது பெரிய தொகையாகத் தோன்றினாலும், வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், ஆதரவுகள், ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவே.

அனைத்து விவசாயிகளின் வேளாண் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்வதால் கடன் சுமை நீக்கப்பட்டு அவர்களை மீண்டும் உற்பத்திக்குத் திரும்பச் செய்யும். விவசாயி கையில் பணம் புழங்கச் செய்வதால் கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சி பெறும். கிராமப்புற வணிகம், சேவைத் துறைகள், சிறு தொழில்கள் ஊக்கம் என ஒட்டுமொத்தமாக கிராமப்புற பொருளாதாரம் ஊக்கம் பெறும். கடன் தள்ளுபடி சமூகப் பாதுகாப்பு நடவடிக்கையாக அமையும்.

எனவே, உணவுப் பாதுகாப்புக்கான முதலீடாக கடன் தள்ளுபடி கருதப்பட வேண்டும். கடன் தள்ளுபடி என்பது ஒட்டு மொத்த சமூகத்தின் உணவு உத்தரவாதத்துக்கான சமூக முதலீடாகும்.

கடன் தள்ளுபடிகள் தொடர் நிகழ்வாக இல்லாமல் தவிர்க்க தமிழ்நாடு விவசாயிகள் வருவாய் உறுதி அளிப்பு திட்டத்தைத் தொடங்க வேண்டும். விளைபொருள்களுக்கு உத்தரவாதமான விலையை உறுதி செய்வதற்கான வழிமுறைகளைச் செயல்படுத்த வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்து வகை இயற்கை இடர்ப்பாடுகளுக்கும், விலை வீழ்ச்சிக்குமான பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஆவன செய்ய வேண்டும்.

வட்டியில்லா வேளாண் கடன், மாவட்ட அளவில் கடனிலிருந்து மீண்டு வருவதற்கான மீட்சித் திட்டங்கள், சந்தை விலை வீழ்ச்சி அடையும் போது விவசாயிகள் கடனில் சிக்காமல் இருப்பதற்கு உற்பத்திச் செலவுடன் வாழ்க்கைச் செலவுக்குமான தொகையை ஈட்டுத் தொகையாக வழங்கும் திட்டம், விவசாயிகளின் குழுக்களுக்கும், மகளிர் குழுக்களுக்கும் விளைபொருள்களை மதிப்புக் கூட்டி உள்ளூரிலும், அருகிலுள்ள நகரங்களிலும் சந்தைப்படுத்துவற்கான திட்டங்கள் போன்றவற்றை மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும்.

கட்டுரையாளர்:

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள்

கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments