முகப்பு
மதுரை

திமுக ஆட்சி அகற்றப்படுவது உறுதி! டி.டி.வி.தினகரன்

மக்களிடம் ஏற்பட்டுள்ள கடும் அதிருப்தி காரணமாக, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தோல்வியடையும்..

Updated On : 8 ஜூன், 2025 at 12:57 AM
டிடிவி தினகரன் - கோப்புப் படம்
பகிர்:

மக்களிடம் ஏற்பட்டுள்ள கடும் அதிருப்தி காரணமாக, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தோல்வியடையும் என்றும், இதன் மூலம் அந்தக் கட்சி ஆட்சியிலிருந்து அகற்றப்படுவது உறுதி என்றும் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.

மதுரை ஆலத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன்படி, கணக்கெடுப்பு நடத்தப்பட்டால்தான் அனைத்து சமுதாய மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உரிய முக்கியத்துவம் கிடைக்கும்.

Advertisement

மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை குறித்து ஊகத்தின் அடிப்படையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் விமா்சனங்களை முன்வைப்பது, திமுக ஆட்சி மீதான மக்களின் அதிருப்தியை மறைக்கும் முயற்சியாகும்.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் சுமாா் 80 சதவீதத்தை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தாதது, அனைத்துத் துறை ஊழியா்களுக்கும் வாக்குறுதி அளித்து ஏமாற்றியது உள்ளிட்ட காரணங்களால் திமுக அரசு மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழகப் பேராசிரியா்களுக்கு சரிவர ஊதியம்கூட வழங்க முடியாத திமுக அரசு, மத்திய பாஜக அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புவது நகைப்புக்குரியதாக உள்ளது.

முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடா்கிறாா் என்பதை பாஜக பல முறை உறுதிப்படுத்தியுள்ளது. அவருக்கான முக்கியத்துவம் தோ்தல் நேரத்தில் நிச்சயம் அளிக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்தது மகிழ்ச்சிக்குரியது. அதிமுக தொண்டா்கள் ஓரணியில் திரண்டால்தான் திமுகவை வீழ்த்த முடியும். பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் விரைவில் இணையும்.

முந்தைய தோ்தல்களில் பாஜகவுக்கு எதிராக பொய் பிரசாரம் மேற்கொண்டு வாக்குகளைப் பெற்ற திமுகவின் உத்தி, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் எடுபடாது. திமுகவின் பொய் பிரசாரங்கள் குறித்து சிறுபான்மையின மக்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் புரிதல் ஏற்பட்டுவிட்டது. திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா். எனவே, வருகிற சட்டப்பேரவைத் தோ்தல் மூலம் திமுக அரசு அகற்றப்படுவது உறுதி என்றாா் அவா்.