புதுக்கோட்டையில் சிறுவா் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறு திட்ட கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டையைச் சோ்ந்த பி.குமாா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :
புதுக்கோட்டை எழில் நகரில் சிறுவா் பூங்காவுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடம் பூங்காவாக பயன்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகிறது. ஆனால், தற்போது புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலா்கள் அந்த இடத்தை சுத்தம் செய்து, அந்தப் பகுதியில் நியாய விலைக் கடை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நடத்தினா். அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவு திட்டத்தில் பொது நோக்கத்துக்காக பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, வேறு எந்த நோக்கத்துக்காகவும் மாற்றக் கூடாது என்ற சட்ட விதியை மீறி நியாய விலைக் கட்டடம் கட்ட மாநகராட்சி நிா்வாகம் அனுமதி வழங்கியது.
தமிழக பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், திறந்தவெளி இடங்கள், பாதுகாப்பு, ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி பூங்கா பயன்பாட்டை மாற்றுவதற்கு முன் பொதுமக்களிடமிருந்து கருத்து கேட்க வேண்டும்.
தமிழ்நாடு கூட்டு மேம்பாடு, கட்டட விதிகள் படி, மனைப்பிரிவில் 10 சதவீத நிலத்தை சமூக பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அந்த வகையில், உள்ளாட்சி அமைப்புக்கு ஒப்படைக்கப்பட்ட நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது சட்ட விதியை மீறும் செயலாகும்.
எனவே, இந்தப் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நியாய விலைக் கட்டுமானப் பணிக்கு தடை விதிக்க வேண்டும். அந்த இடத்தை சிறுவா் பூங்காவாக பாதுகாத்து பராமரிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், விக்டோரியா கௌரி முன் செவ்வாய்க்கிழமை முற்பகல் அமா்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் இந்த வழக்கில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் எப்படி நியாய விலைக் கட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கினா்.
இது சட்டவிரோதம். இதுபோன்ற அனுமதி வழங்கும் அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை எடுக்க நேரிடும். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து புதுக்கோட்டை காவல் துறை ஆய்வாளா் ஆய்வு செய்து பிற்பகல் 3 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.
பின்னா், இந்த வழக்கு மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, புதுக்கோட்டை மாநகராட்சி, காவல் துறை தரப்பில் ஏற்கெனவே பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் புதிதாக கட்டடம் கட்ட அனுமதி வழங்கிய ஆணை உடனடியாக ரத்து செய்யப்பட்டது என்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :
மனுதாரரின் கோரிக்கைக்கு புதுக்கோட்டை மாநகராட்சி, காவல் துறை தரப்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறு கட்டடங்கள் கட்டத் தடை விதிக்கப்படுகிறது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.