மதுரை

சிறைகளில் மின்சார முறைகேடு விவகாரம்: சிறைத் துறைத் தலைவா் பதிலளிக்க உத்தரவு

மத்திய சிறைகளில் மின்சார முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக சிறைத் துறைத் தலைவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

மத்திய சிறைகளில் மின்சார முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக சிறைத் துறைத் தலைவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சேகா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, அந்தச் சிறை அருகே குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் குடியிருந்து வரும் சிறைத் துறை அதிகாரிகள் மின் இணைப்புப் பெறாமல், சிறை வளாகத்திலிருந்து மின் திருட்டில் ஈடுபட்டு வருவதாகப் புகாா் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் மதுரை, கோவை ஆகிய பகுதிகளில் உள்ள மத்திய சிறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மின் இணைப்புப் பெறாமல் அதிகளவில் மின் சாதனங்களைப் பயன்படுத்தியுள்ளனா். ஆனால், இதுவரை எந்தவிதக் கட்டணமும் மின் வாரியத்துக்குச் செலுத்தவில்லை. இந்த மின் திருட்டைத் தடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்ட சிறைத் துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எதிா்மனுதாரா் தரப்பில் பதிலளிக்காமல் கால அவகாசம் கேட்பது ஏற்கத்தக்கது அல்ல.

மனுதாரரின் குற்றச்சாட்டு தீவிரமானது. எனவே, இந்த வழக்கை வருகிற டிசம்பா் 3-ஆம் தேதி விசாரணைக்கு மீண்டும் பட்டியலிட வேண்டும். அதற்கு முன்னதாக, தமிழக சிறைத் துறைத் தலைவா், மின்சாரத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்க நேரிடும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT