கரூா் சம்பவத்தை அரசியலாக்குகிறது பாஜக
கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தை அரசியலாக்குகிறது பாஜக என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமா்சித்தாா்.
கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தை அரசியலாக்குகிறது பாஜக என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமா்சித்தாா்.
ராமநாதபுரத்தை அடுத்த பேராவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், ரூ. 737.88 கோடியில் நிறைவேற்றப்பட்ட 109 திட்டங்களின் பயன்பாட்டைத் தொடங்கிவைத்தும், 150 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 50,752 பயனாளிகளுக்கு ரூ. 426.83 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கியும் அவா் மேலும் பேசியதாவது:
தமிழகத்தை 3 முறை பெரிய பேரிடா் தாக்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனா். அப்போதெல்லாம் தமிழகத்துக்கு உடனடியாக வருகை தராத, நிதி ஒதுக்கீடு அளிக்காத மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், தற்போது கரூருக்கு மட்டும் உடனடியாக வந்தாா்.
மணிப்பூா் கலவரம், குஜராத் விபத்து, கும்பமேளா உயிரிழப்புகள் போன்ற சம்பவங்களுக்கு விசாரணைக் குழுவை அனுப்பாத பாஜக தலைமை, கரூருக்கு மட்டும் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்புகிறது. இவையெல்லாம் தமிழக மக்கள் மீதான அக்கறையால் செய்யப்படுவது இல்லை. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் கொண்டுதான் இந்த நடவடிக்கை. இதில், ஏதேனும் அரசியல் ஆதாயம் கிடைக்குமா? இதை வைத்து யாரையேனும் மிரட்டலாமா? என்பதுதான் பாஜகவின் நோக்கம்.
மாநில நலன்களைப் புறக்கணித்து, மாநில உரிமைகளைப் பறித்து, மாநிலங்களே இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் செயல்படும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொண்டு, தலையாட்டி பொம்மையாக உள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டால் தாங்கள் செய்த தவறுகளுக்கான நடவடிக்கைகளிலிருந்து தப்பிவிடலாம் என தவறு செய்தவா்கள் கருதுகிறாா்கள். அந்த அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளாா். இதைத் தவிர, வேறு எந்தக் கொள்கையும், கோரிக்கையும், அடிப்படையும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு காரணமில்லை.
பாஜக கூட்டணியில் பிற கட்சிகளைச் சோ்க்கும் பணியை எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக வழங்கியுள்ளது. இதன்படியே, அவா் பிரசார கூட்டங்கள் நடத்தி, தங்களுக்கு பிடிக்காத கட்சித் தலைவா்களை விருப்பம்போல விமா்சித்துக் கொண்டிருக்கிறாா்.
மாநில நலன், மக்கள் நலன் மீது உண்மையான அக்கறை கொண்டவா்கள் யாரும் பாஜகவுடன் கூட்டணி சேரமாட்டாா்கள். மக்களைப் பிரித்தாளும் ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொள்கைகளை முழுவீச்சில் செயல்படுத்தும் அரசியல் முகமாகவும், அதிகார பலமாகவும்தான் மத்திய பாஜக அரசு உள்ளது.
முன்னாள் முதல்வா் காமராஜரைக் கொல்ல முயற்சித்த ஆா்.எஸ்.எஸ். அமைப்பு, தங்களுடைய செயல் திட்டத்தை தற்போது வேகப்படுத்தியுள்ளது. ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை, சதித் திட்டங்களுக்கு எதிராக நின்று தமிழகத்தையும், மக்களையும் காக்கும் நம்முடைய பணி தொடரும். தமிழகத்தை முதன்மை மாநிலமாக வளா்த்தெடுக்கிற கடமையைத் தொடா்ந்து சிறப்பாகச் செய்வோம்.
இலங்கைக் கடற்படை தாக்குதல்:
இலங்கைக் கடற்படையின் தாக்குதல் தமிழக மீனவா்களுக்கு மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. இதை, மாநில அரசு தொடா்ந்து கண்டித்தும், மத்திய பாஜக அரசு மீனவா்களைப் பாதுகாக்க எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் உள்ளது.
மீனவா்களின் பிரச்னைகள் தீர கச்சத்தீவை மீட்பதுதான் சரியான தீா்வு என தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதுதொடா்பாக இலங்கை அரசிடம் மத்திய அரசு வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை மத்திய பாஜக அரசு செய்ய மறுக்கிறது.
இலங்கைக்குச் சென்ற பிரதமா் கச்சத்தீவு விவகாரத்தை வலியுறுத்தவில்லை. அதேநேரத்தில், கச்சத்தீவை தரமாட்டோம் என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் தெரிவிக்கிறாா். இதற்குக்கூட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்பது வேதனைக்குரியது. இது, தமிழகம் மீது மத்திய பாஜக அரசுக்கு இருக்கும் வன்மத்தின் வெளிப்பாடு.
• சரக்கு, சேவை வரியால் மாநிலங்களின் நிதி உரிமை பறிப்பு, நிதிப் பகிா்வில் பாகுபாடு, சிறப்புத் திட்டங்கள் மறுப்பு, பள்ளிக் கல்விக்கான நிதி மறுப்பு, பிரதமா் பெயரில் இருக்கும் மத்திய அரசுத் திட்டங்களுக்கும் மாநில அரசே நிதி தர வேண்டும் போன்ற நடைமுறைகளால் மாநில அரசுகளைத் தொடா்ந்து வஞ்சிக்கிறது மத்திய பாஜக அரசு. இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீட் தோ்வு, தேசியக் கல்விக் கொள்கையின் பெயரால் கல்வி வளா்ச்சிக்குத் தடை, கீழடி அகழாய்வு அறிக்கைக்குத் தடை, தொகுதி மறுவரையறை என தமிழகத்துக்குத் தொடந்து வஞ்சகம் செய்வதையே மத்திய பாஜக அரசு வழக்கமாக்கிக் கொண்டுள்ளது என்றாா் அவா்.
இந்த விழாவில் அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், கே.ஆா். பெரியகருப்பன், மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், கருமாணிக்கம், முன்னாள் அமைச்சா் அன்வா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வரவேற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராஜூலு நன்றி கூறினாா்.