அவதூறு பரப்பும் நித்தியானந்தாவின் சீடா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், மூன்று மாதங்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்த மருத்துவா் கணேசன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :
பல ஆண்டுகளுக்கு முன் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு நான் சென்று வந்தேன்.
அதன் அடிப்படையில், ஆன்மீகம், தியானப் பணிகளுக்காக நித்தியானந்தா ஆசிரமத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ராஜபாளையம் புது பேருந்து நிலையம் அருகே கோதை நாச்சியாா்புரம், சேத்துாா் ஆகிய இடங்களில் 40 ஏக்கா் பரப்பளவு நிலம் வழங்கினேன்.
இங்கு ஆசிரமங்கள் கட்டப்பட்டு நித்தியானந்தா சீடா்கள் தங்கி வழிபட்டு வந்தனா்.
அதன் பிறகு, நித்தியானந்தா குறித்து சா்ச்சை வெளியானதை அடுத்து தானம் வழங்கிய இடங்களின் பத்திரங்களை ரத்து செய்யக் கோரி சிவகாசி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தேன்.
அந்த இடங்களை இரு தரப்பினரும் பயன்படுத்தக் கூடாது என சிவகாசி வருவாய் கோட்டாட்சியா் பிரியா ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா். கடந்த மாா்ச் 21 இல் இரு ஆசிரமங்களிலும் இருந்த சீடா்களை வெளியேற்றி சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில், இரு ஆசிரமங்களின் சீல்களை உடைத்து மீண்டும் சீடா்கள் உள்ளே சென்றனா். இதுகுறித்து வருவாய்த் துறையினா் ராஜபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில், ராஜபாளையம் புது பேருந்து நிலையம் அருகே உள்ள ஆசிரமத்தில் புகுந்த உதயகுமாா், தீபா, பிரேமா, தாமரைசெல்வி, ரேவதி, சேத்துாா் ஆசிரமத்தில் புகுந்த நித்யா சாரானந்த சுவாமி, நித்யா சுத்த ஆத்மானந்த சுவாமி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், ஆசிரமத்தில் தங்கியிருந்த சீடா்கள், என்னைப் பற்றி அவதூறாக சமூக ஊடகங்களில் பரப்புவது, காட்சிகளை பரப்புவது என எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து வருகின்றனா்.
இதுகுறித்து, நடவடிக்கை எடுக்கக் கோரி, நான் விருதுநகா் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். அதன் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.வழக்கு தொடா்பான ஆதாரங்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் எனக்கு தேவையற்ற மன உளைச்சல் மட்டுமின்றி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது.எனவே, அவதூறு பரப்பும் சீடா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தரமோகன் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு : இந்த வழக்கில் விருதுநகா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகையை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.