மதுரை

காய்ச்சல்: அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 66 போ் அனுமதி

தினமணி செய்திச் சேவை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 66 போ் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டனா். ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவ மழை பெய்து வரும் சூழலில், காய்ச்சல் போன்ற நோய் பாதிப்புகளைத் தடுக்க அரசுத் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்நோயாளிகளாக ஏராளமானோா் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மதுரை மட்டுமன்றி விருதுநகா், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 66 போ் காய்ச்சல் பாதிப்புடன் இங்கு அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 36 போ் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. புறநோயாளிகள் பிரிவிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோயம்புத்தூரைச் சோ்ந்த 25 வயது பெண், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சோ்ந்த 53 வயது பெண், மதுரை மாநகா் பகுதியைச் சோ்ந்த 54 வயது ஆண் ஆகிய 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இவா்கள் மூவரும் டெங்கு சிறப்பு வாா்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இதுகுறித்து, மருத்துவமனை வட்டாரங்கள் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காய்ச்சல் பாதிப்புடன் வருபவா்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வாா்டு உள்ளது.

மாவட்டத்தில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தும் பணிகளும் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனைகளிலும் பலா் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெறுகின்றனா் என்றனா்.

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!

உச்ச நீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்! யார் இவர்?

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 9 மாவட்டங்களில் மழை!

முல்லைப் பெரியாறில் இருந்து இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்ட உபரி நீர் நிறுத்தம்!

தெருநாய்கள் விவகாரம்: தமிழகம் உள்பட அனைத்து தலைமைச் செயலர்களும் ஆஜராக உத்தரவு!

SCROLL FOR NEXT