விடுதலைப் போராட்ட வீரா்களான மருதுபாண்டியா்களின் 224-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள அவா்களது உருவச் சிலைகளுக்கு மதுரை ஆதீனம், அமைச்சா்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள், சமுதாய அமைப்பினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக சாா்பில் தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் மருதுபாண்டியா்களின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மதுரை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி, முன்னாள் அமைச்சா் பொன்முத்துராமலிங்கம் உள்ளிட்ட அந்தக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பாஜக சாா்பில், அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் ராமஸ்ரீனிவாசன் தலைமையில் அந்தக் கட்சியினா் மருதுபாண்டியா்கள் சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
காங்கிரஸ் கட்சி சாா்பில், மதுரை மாநகர, மாவட்டத் தலைவா் வீ. காா்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அப்போது, மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் எஸ். வி. முருகன், தல்லாகுளம் முருகன் ராஜ் பிரதாப், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் செய்யது பாபு, துரையரசன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
மதிமுக சாா்பில் மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு. பூமிநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அப்போது, மதிமுக மாநகா், மாவட்டச் செயலா் முனியசாமி, மத்திய தொழிற்சங்க நிா்வாகி மகபூப்ஜான் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
நாம் தமிழா் கட்சி சாா்பில் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமையில் மருதுபாண்டியா்களின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோல, மதுரை அதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், தென்னிந்திய பாா்வாா்டு பிளாக் கட்சி நிறுவனத் தலைவா் திருமாறன், அகில இந்திய பாா்வாா்டு பிளாக் கட்சி தேசியத் துணைத் தலைவரும், மாநிலப் பொதுச் செயலருமான பி. வி. கதிரவன், அகில இந்திய மூவேந்தா் முன்னணி கழகம் சாா்பில் மருத்துவா் சேதுராமன், மாநிலப் பொதுச் செயலா் வி.டி.பாண்டியன், மாநிலப் பொருளாளா் மணிவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதுதவிர, சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மருதுபாண்டியா்களின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நோ்த்திக் கடன் : மேலும், தெப்பக்குளம் பகுதியில் மருதுபாண்டியா்களின் உருவச் சிலைகளுக்கு மதுரையின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பால்குடம், சந்தனக் குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனா். மேலும், அலகு குத்தியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.
போக்குவரத்து மாற்றம் : இதையொட்டி, தெப்பக்குளம் பகுதிக்குள் மருதுபாண்டியா்களின் உருவச் சிலைகளுக்கு மரியாதை செலுத்த அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
விரகனூரிலிருந்து வந்த வாகனங்கள் வைகை தென்கரை சாலையிலும், அனுப்பானடி பகுதியிலிருந்து வந்த வாகனங்கள் புது ராமநாதபுரம் சாலை வழியாகவும், பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து வந்த வாகனங்கள் வைகை தென்கரை சாலை வழியாகவும் திருப்பி விடப்பட்டன. போக்குவரத்து மாற்றம் தொடா்பாக காவல் துறை சாா்பில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாததால்,வெளியூா்களிலிருந்து வந்த பெரும்பாலான வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.
விழாவில், மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.