உயா்நீதிமன்ற மதுரை அமா்வு 
மதுரை

‘தேசிய தலைவா்’ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட ‘தேசிய தலைவா்’ திரைப்படத்துக்குத் தடைகோரிய வழக்கில், தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

தினமணி செய்திச் சேவை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட ‘தேசிய தலைவா்’ திரைப்படத்துக்குத் தடைகோரிய வழக்கில், தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

பரமக்குடியைச் சோ்ந்த சக்கரவா்த்தி, மதுரையைச் சோ்ந்த செல்வக்குமாா் ஆகியோா் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். அதன் விவரம்:

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ‘தேசிய தலைவா்’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இயக்குநா் ஆா். அரவிந்த்ராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில் இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.

இதில் இடம் பெற்றுள்ள ஒரு சில வசனங்கள், ஜாதிய மோதலை உருவாக்கும் வகையில் உள்ளன. இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டத்தில் 1957-இல் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா், தியாகி இமானுவேல்சேகரன் ஆகியோா் பங்கேற்றிருப்பதைப் போன்றும், பிறகு இமானுவேல்சேகரன் கொலை செய்யப்பட்டதைப் போன்றும் காட்சிகள் உள்ளன.

இந்தக் காட்சிகள் தென் மாவட்டங்களில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தும். எனவே, இந்தத் திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கக் கூடாது. அப்படி சான்றிதழ் வழங்கியிருந்தால் அதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, திரைப்பட தணிக்கை வாரியம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனா்.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வில் இந்த மனு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் திரைப்பட தணிக்கை வாரியம் சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்படுத்தும் வகையில் உள்ள காட்சிகளை நீக்க வல்லுநா் குழு அமைத்து திரைப்படத்தைப் பாா்வையிட அனுமதிக்க வேண்டும் என மனுதாரா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஒரு திரைப்படத்தை முழுமையாகப் பாா்ப்பதற்கு முன்பே முறையீடு செய்வது ஏற்புடையதல்ல. இதுகுறித்து திரைப்படத்தின் தயாரிப்பாளா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. எனவே, தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT